Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

30 வகை 'ஈஸி ரெசிபி'கள்

  • PDF
 

வீட்டில் இருக்கும் பெரியவர்கள்... எதையாவது ஆசைப்பட்டு சாப்பிட நினைக்கும்போது, 'அம்மா... ப்ளீஸ், அதெல்லாம் வேண்டாம். சொன்னா கேளுங்க! பின்னாடி... யாரு அவஸ்தப்படுறது?' என்று தடை போடுவார்கள் பிள்ளைகள்.

அது உண்மைதான்...! வயதாகிவிட்டாலே ஏதாவது ஒரு கோளாறு எட்டிப் பார்த்து இடைஞ்சல் செய்து-கொண்டே இருக்கும். எதைச் சாப்பிட்டாலும், கடைசியில் செரிமானக் கோளாறு என்று வந்து நின்று படுத்தி எடுக்கும்.

'சரி, என்னதான் சாப்பிடுவது?' என்று பெரியவர்களும்... 'என்னதான் சமைத்துக் கொடுப்பது?' என்று வீட்டில் உள்ளவர்களும் குழம்பிக் கொண்டே இருப்பது பல வீடுகளில் காணும் காட்சி!

இதோ... பெரியவர்களின் ஆசைக்கு ஏற்ப, அதேசமயம் ஆரோக்கியமான ரெசிபிகளை வெரைட்டியாக 'பட்ஜெட் சமையல்'. வெரைட்டியாக சமைத்துக் கொடுத்து, வீட்டிலிருக்கும் பெரியவர்களின் மனதைக் குளிர வையுங்கள். பெரி-யோர்கள் சந்தோஷமாக இருந்தால்... வீடு எப்போதும் அழகாகவும், அமைதியாகவும் இருக்கும்!

தக்காளி வெஜிடபிள் சூப்

தேவையானவை: தக்காளி - 1, முட்டைகோஸ், கேரட் துருவல் - தலா 1 கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், சோள மாவு அரை ஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, துருவிய முட்டை கோஸ், கேரட்டைப் போட்டு வேக விடவும். வெந்தவுடன் அதனை வடிகட்டி காய்கறிகளை மசிக்கவும். வடிகட்டிய நீருடன் மிளகுத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்க்கவும். தண்ணீர் விட்டுக் கரைத்த சோள மாவையும், மசித்த காய்களையும் அதில் சேர்த்து, ஒருமுறை கொதிக்க விடவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: 'பசியே எடுக்கல...' என்று கவலைப்படுபவர்களுக்கு ஏற்ற சூப் இது!

வெந்தய தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 200 கிராம், வெந்தயம் - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, சுத்தம் செய்து அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, புளிக்க விடவும். தோசைக்கல்லில் சிறிய தோசைகளாக வார்த்து, இரு-புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: வெந்தயம் குளிர்ச்சி தந்து, உஷ்ணத்தைக் குறைக்-கும். வெந்தய தோசைக்கு புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி சிறந்த காம்பி-னேஷன்!

ஆரஞ்சுத் தோல் துவையல்

தேவையானவை: கமலா ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 1, உளுத்தம்-பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அதை நன்கு வதக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்-பருப்பை வறுக்கவும். வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் இந்தத் துவையலைப் போட்டு எண்ணெய் விட்டு சாப்பிட்டால், கமலா ஆரஞ்சு வாசனையுடன் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம், தயிர் பச்சடி இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

கீரை பொரித்த குழம்பு

தேவையானவை: முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக்கீரை (ஆய்ந்து பொடியாக நறுக்கியது) - தலா 1 கப், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு (இரண்டும் கலந்தது) - 1 கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 6, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பை வேக வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும். கீரைகளை உப்பு சேர்த்து வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், சீரகம், மிளகை வறுத்து நைஸாக அரைத்து, வேக வைத்த கீரையுடன் கலக்கவும். அதில் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கடுகு, உளுத்தம்-பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி கலந்து இறக்கவும்.

குறிப்பு: கீரை பொரித்த குழம்பு வயதானவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள மாங்காய் இனிப்பு பச்சடி சரியான மேட்ச்!

இஞ்சி-மிளகு மோர்க்குழம்பு

தேவையானவை: வெண்டைக்-காய், மிளகு - தலா 10, புளித்த மோர் - அரை லிட்டர், காய்ந்த மிளகாய் - 1, இஞ்சி (நறுக்கியது) - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவலை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து மோருடன் கலக்கவும். வெண்டைக்-காயை நீளத் துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாகும் வரை வதக்கி, மோருடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அதிகம் கொதிக்க விடாமல் சூடாக்கவும். இதில் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு: 'தினமும் சாம்பாரா..?' என போரடிக்காமல் இருக்க இந்தக் குழம்பு! இதற்கு சுட்ட அப்பளம் அருமையான ஜோடி.

அவியல்

தேவையானவை: பீன்ஸ் - 10, கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் - தலா 1, பூசணிக்கீற்று - 1, அவரைக்காய் - 6, தேங்காய் துருவல் - 1 கப், மொச்சை - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, தயிர் - ஒரு கப், கறி-வேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் மொச்சை, உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிள காயை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனை தயிரில் விட்டுக் கலக்கவும். வேக வைத்த காய்கறிகளுடன் கலந்த தயிரைச் சேர்த்து கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் விட்டு, ஒருமுறை கொதித்ததும் இறக்கவும்.

குறிப்பு: பொரித்த அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன். இது அடைக்கு பொருத்தமான சைட் டிஷ்!

இஞ்சித் துவையல்

தேவையானவை: இஞ்சி - பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - கைப்பிடி அளவு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். வதக்கிய மற்றும் வறுத்த பொருட்களை ஒன்றாக்கி, அவற்றுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும். இதற்கு சுட்ட அப்பளம் அருமையான காம்பினேஷன்.

வேப்பம்பூ பச்சடி(வேப்பம்பூ குழம்பு)

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 1, கடுகு - அரை டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, வெல்லம் (பொடித்தது) - 1 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை அதில் போட்டு லேசாக வறுக்கவும். மணம் வந்தவுடன் கரைத்த புளியை அதில் விட்டு வெல்லம், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: இதை குழம்பு போல சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

கலவைக்காய் கூட்டு

தேவையானவை: பாகற்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய், பூசணிக்காய் - தலா 4 துண்டுகள், மொச்சை (தோலுரித்தது) - 1 கப், அவரைக்காய் - 4, வாழைக்காய் - அரை காய், பீன்ஸ் - 10, கேரட் - 1, தேங்காய் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் - 1, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: எல்லா காய்களையும் சுத்தம் செய்து, உப்பு சேர்த்து வேக விடவும், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்துள்ள காய்களுடன் அரைத்ததை விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: இது, சைட் டிஷ் தேவைப்படாத விட்டமின் கூட்டு!

இலை வடகம்

தேவையானவை: இட்லி அரிசி - 3 கப், பச்சரிசி - 1 கப், ஓமம் - 1 டீஸ்பூன், வாழை இலை - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இரண்டு அரிசியையும் ஒன்றாக ஊற வைத்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். அதில் உப்பு, ஓமம், நல்லெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கி புளிக்க வைக்கவும். வாழை இலையை நறுக்கி, அதன் பின்புறத்தில் மாவை பரவலாக ஊற்றி இலையை மூடவும். குக்கரின் அடிப்பாகத்தில் பயன்படுத்தப்படும் தட்டை, கடாயில் வைத்து, அது மூழ்காதவாறு தண்ணீர் விடவும். தட்டின் மீது மாவுடன் உள்ள வாழை இலையை வைத்து, மூடி வேக விடவும். 4-5 நிமிடங்கள் கழித்து வெந்ததும் வெளியே எடுக்கவும். ஆறியதும், வடகம்தானே வரும்போது எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: தோசை போல இருக்கும் இந்த வடகம், எளிதில் ஜீரணம் ஆகும். இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்!

மோர் ரசம்

தேவையானவை: மோர் - அரை லிட்டர், மோர்மிளகாய் - 2, வெந்தயம், கடுகு, சீரகம், ஓமம் - தலா கால் டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மோர்மிளகாய், சீரகம், ஓமம் தாளித்து, அதை மோருடன் சேர்த்துக் கலக்கவும். அரிசி மாவை தண்ணீர் விட்டுக் கரைத்து அதில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கி, அடுப்பில் ஏற்றவும். கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அதனை இறக்கி விடவும்.

குறிப்பு: இது, எளிதில் ஜீரணமாகக் கூடியது. வயிற்றுவலி, வாந்தி ஏற்படும் காலத்தில் சாப்பிட ஏற்றது.

ஓட்ஸ் தோசை

தேவையானவை: ஓட்ஸ் - 200 கிராம், நறுக்கிய வெங்காயம் - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1, இஞ்சி (நறுக்கியது) - சிறிய துண்டு, கடுகு, சீரகம், தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸ§டன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். அதை தோசை மாவில் போட்டு, கட்டியில்லாமல் கலக்கவும். தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: நார்சத்து நிறைந்த இந்த தோசை எளிதில் ஜீரணமாகக் கூடியது. இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சாம்பார், சட்னி நல்ல காம்பினேஷன்.

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம், சாம்பார்பொடி - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கடுகு, வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசலை சேர்க்கவும். அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும். குழம்பு கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும், குழம்பு தொட்டும் சாப்பிடலாம். உருண்டைகள் ஆவியில் வெந்துள்ளதால் பயமின்றி சாப்பிடலாம்.

கேரட் அல்வா

தேவையானவை: கேரட் - 4, பால் - 200 மில்லி, பாதாம்பருப்பு - 2, முந்திரிப்பருப்பு 6, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1 கப்.

செய்முறை: கேரட்டை தோல் சீவிக் கழுவவும். அதனை துருவி சூடான பாலில் வேக விடவும். வெந்நீரில் பாதாம்பருப்பை ஊற வைத்து, தோலுரித்து முந்திரிப்-பருப்புடன் சேர்த்து அரைக்கவும். இதை, வெந்து கொண்டிருக்கும் கேரட்டுடன் சேர்த்துக் கிளறவும். அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் பீட்ரூட் அல்வாவும் தயாரிக்க-லாம்.

முருங்கை இலை அடை

தேவையானவை: முருங்கை இலை - ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி - 200 கிராம், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 1 கப், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 3 பல், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியைத் தனியாக ஊற வைக்கவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பைக் கலந்து தனியாக ஊற வைக்கவும். அரிசி ஊறியதும், அதனுடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அது லேசாக மசிந்ததும், ஊற வைத்த பருப்புகளைச் சேர்த்து அரைக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய முருங்கை இலையை அரைத்த மாவில் சேர்த்து, அடைமாவு பதத்தில் கலக்கவும். தோசைகல்லில் மாவை இட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு அடைகளாக சுட்டெடுக்கவும்.

குறிப்பு: அவியல், இட்லி மிளகாய்ப்பொடி, வெண்ணெய்-வெல்லம் ஆகியவை இதற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சைட் டிஷ்!

சுண்டைக்காய் குழம்பு

தேவையானவை: பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கைப்பிடி அளவு, புளி - எலுமிச்சம்பழ அளவு, சாம்பார்பொடி - 3 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கடலைப்-பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, லேசாக நசுக்கிய சுண்டைக்காயைப் போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, அதில் சாம்பார்பொடி சேர்த்து வதக்கவும். கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீர், வதக்கிய சுண்டைக்காய், உப்பு சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

குறிப்பு: பித்தம், சர்க்கரை அதிகமுள்ளவர்களுக்கு சுண்டைக்காய் எளிய வரப்பிரசாதம்.

ரவை - மிளகுப் பொங்கல்

தேவையானவை: ரவை - கால் கிலோ, நெய் - 100 கிராம், மிளகு - 10, சீரகம் - 1 டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, இஞ்சி (நறுக்கியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, ரவையை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் மீண்டும் நெய் விட்டு... இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலையைத் தாளிக்கவும். அதில் ஒரு பங்கு ரவைக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: பசியை உடனே அடக்கும்; எளிதில் ஜீரணமாகும் எளிய ரெசிபி! இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி (அ) வேர்க்கடலை சட்னி சிறந்த காம்பினேஷன்.

மூலிகை சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெற்றிலை - 1, துளசி இலை - 10, இஞ்சி (நறுக்கியது) - சிறு துண்டு, ஓமம், மிளகுத்-தூள் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 2 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெற்றிலை, துளசி, ஓமம், மிளகுத்தூள், பூண்டுப் பல், இஞ்சி எல்லாவற்றையும் நைஸாக மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த மூலிகை விழுது, உப்பு, தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்-கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: துளசி, ஓமம், வெற்றிலை, இஞ்சி எல்லாம் சேர்ந்திருப்பதால் வாசனையுடன் இருக்கும். வயிறு 'ஸாரி' சொல்லும் காலத்துக்கு ஏற்ற உணவு.

வெஜிடபிள் உசிலி

தேவையானவை: நறுக்கிய பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய காய்களை உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விட்டு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக ரவை பதத்தில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்புடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, அதில் போட்டு மொறுமொறுப்பாக வரும் வரை கிளறவும். பதம் வந்ததும், வேக வைத்துள்ள காய்களைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: மோர்க்குழம்பு சாதத்துக்கு வெஜிடபிள் உசிலி சூப்பர் டூப்பர் மேட்ச்!

வாழைப்பூ வடை

தேவையானவை: வாழைப்பூ (ஆய்ந்து நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், இஞ்சி (நறுக்கியது) - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைப்பூவைப் போட்டு வதக்கவும். அரைத்த மாவில் வதக்கிய வாழைப்பூ, நறுக்கிய கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வடைகளைத் தட்டிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: இதற்குச் சாம்பார் சிறந்த காம்பினேஷன். கீரை சேர்த்தும் செய்யலாம்.

பிரண்டை துவையல்

தேவையானவை: இளம் பிரண்டை - 10 துண்டுகள், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, இஞ்சி - சிறு துண்டு, கறி-வேப்-பிலை - சிறிதளவு, எண்-ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு, நறுக்கிய பிரண்டையைச் சேர்த்து வதக்கவும். உளுத்தம்பருப்பை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, இஞ்சியைத் தனியாக வதக்கவும். வதக்கிய பிரண்டை, இஞ்சி, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்புடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்துடன் இந்தத் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம், தயிர் பச்சடி இதற்கு கலக்கல் காம்பினேஷன். பிரண்டைக்கு பசியைத் தூண்டும் மருத்துவக் குணம் உண்டு.

இஞ்சி வெள்ளரிக்காய் பச்சடி

தேவையானவை: இஞ்சி (நறுக்கியது) - சிறிய துண்டு, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் - தலா 1, தயிர் - 1 கப், தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த விழுது, நறுக்கிய வெள்ளரிக்காய், உப்பு ஆகியவற்றைத் தயிருடன் சேர்த்து நன்கு கலக்கினால்... அசத்தல் பச்சடி தயார்!

குறிப்பு: மழைக் காலத்தில் கறிகாய் கிடைக்காமல் அல்லாடும் சமயத்தில் செய்வதற்கு ஏற்றது. பருப்புப் பொடி, துவையல் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

வாழைத்தண்டு பொரியல்

தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு சாண் துண்டு, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், உப்பு, மோர் - தேவை-யான அளவு.

செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டைப் பிழிந்து போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும்... இஞ்சித் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மிதமான தீயில் மூடி வேக வைக்கவும். இறக்குவதற்கு முன் கறிவேப்பிலை போட்டுக் கிளறவும்.

குறிப்பு: வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், அது நீரிழிவு நோய், சிறுநீரகக் கல் வராமல் தடுக்கும்.

மேத்தி கூட்டு

தேவையானவை: வெந்தயக்கீரை - 2 சிறிய கட்டு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, ஆய்ந்த வெந்தயக் கீரையைப் போட்டு வதக்கவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெந்த பருப்புடன் கீரை, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலக்கி இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சியானது. உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு கண்கண்ட மருந்து!

தானியக் கஞ்சி

தேவையானவை: கோதுமை - 100 கிராம், கொள்ளு - 2 டீஸ்பூன், கேழ்வரகு, சோளம் - தலா ஒரு கப், சிவப்பு அரிசி, கம்பு, தினை - தலா 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 6, பொட்டுக்கடலை - ஒரு சிறிய கப், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் - 10, பால் - 200 மிலி.

செய்முறை: தானியங்கள் மற்றும் பருப்புகளை தனித்-தனியாக வறுத்து, ஒன்றாகக் கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன், பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

6 டீஸ்பூன் மாவில், இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு கரைத்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். மணம் வந்ததும், காய்ச்சிய பாலை அதில் விட்டு, பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

குறிப்பு: மாவை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது கஞ்சி தயாரித்துக் கொள்ளலாம். விரத நாட்களுக்கும், உடனே பசி ஆற்றுவதற்கும் ஏற்ற கஞ்சி.

வெஜிடபிள் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், முள்ளங்கித் துருவல், கேரட் துருவல் - தலா ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்கறி துருவல்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். அவற்றின் மீது, வதக்கிய காய்களைப் பரவலாகப் போட்டுச் சாப்பிடலாம். அல்லது வதக்கிய காய்களை மாவுடன் கலந்து சப்பாதிகளாகச் சுட்டும் சாப்பிடலாம்.

குறிப்பு: இதற்கு சைட் டிஷ் தேவைப்படாது.

டைஜஸ்டிவ் மோர்

தேவையானவை: மோர் - அரை லிட்டர், புதினா - கைப்பிடி அளவு, இஞ்சி (நறுக்கியது) - சிறு துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மோருடன் கலக்கவும்.

குறிப்பு: வெயில் காலத்திலும், செரிமானக் கோளாறு உள்ள சமயத்திலும் கைகொடுக்கும் சிம்பிள் ரெசிபி இது!

வெஜிடபிள் மோர்க்கூட்டு

தேவையானவை: முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா ஒரு கப், மோர் - 200 மில்லி, பச்சை மிளகாய் - 1, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துருவிய காய்களை உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த காய், அரைத்த விழுது ஆகியவற்றை மோருடன் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். சிறிது கொதித்ததும், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கவும்.

குறிப்பு: மோர்க்கூட்டும் பொரித்த அப்பளமும் இணைபிரியா ஜோடி!

வேப்பம்பூ சாதம்

தேவையானவை: அரிசி - 250 கிராம், வேப்பம்பூ (காய்ந்தது) - ஒரு சிறிய கப், மோர்மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் அரிசி வைத்து உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... வேப்பம்பூ, கடுகு, மோர்மிளகாய் தாளிக்கவும். சாதத்தில் உப்பு சேர்த்து, தாளித்ததை அதில் கொட்டிக் கிளறினால்... மணக்க மணக்க சாதம் ரெடி!

குறிப்பு: தயிர் பச்சடி, வெங்காய சாலட் இதற்கு சிறந்த காம்பினேஷன். வேப்பம்பூ, பித்தத்தை தணிய வைக்கும் அருமருந்து!

மூலிகை கஷாயம்

தேவையானவை: துளசி இலை - 10, அருகம்புல் - சிறிதளவு, கற்பூரவல்லி இலை - 10 (அ) ஓமம் - 2 டீஸ்பூன், சித்தரத்தை (நசுக்கியது) - 2 துண்டுகள், பனங்கல்கண்டு - ஒரு டீஸ்பூன், வெற்றிலை - 2, சீரகம் - 2 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், அரிசி திப்பிலி - சிறிதளவு, வேப்பம்பூ - 2 டீஸ்பூன்.

செய்முறை: தேன் தவிர்த்த மற்ற பொருட்கள் அனைத்தையும் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். பாதி அளவுக்கு சுண்டியதும்... வடிகட்டி, ஆற வைத்து, மிதமான சூட்டில் தேன் கலந்து குடிக்கவும்.

குறிப்பு: மழை, குளிர்காலங்களில் காலை, மாலை இருவேளையும் இந்தக் கஷாயத்தைக் குடித்தால்... சளி, இருமல் பக்கத்தில் நெருங்காது.

Comments  

 
+1 # WOMEN 2010-06-23 03:51
My family request you to update more kitchen recipes. Also please allot a separate section for WOMEN (MAGALIR). Shukaran.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh