Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நம்மூர்வாசியின் வட இந்திய சுற்றுலா அனுபவம்

  • PDF

Indiaபரங்கிப்பேட்டையை சேர்ந்த சகோதரர் அலி அப்பாஸ், சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் சென்று வந்த வட இந்திய சுற்றுலா அனுபவத்தை "இந்நேரம்" இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். நமது MYPNO வாசகர்களும் அந்த அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காக நன்றியுடன் நமது தளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

இதுபோன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா அனுபவங்களை வாசகர்களும் பகிர்நது கொள்ளலாம் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் நமது MYPNO தளத்தில் வெளியிடப்படும். 

--------------------------

வட இந்தியச் சுற்றுலா – ஒரு பயண அனுபவம்

கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்துடன் வட இந்தியாவுக்கு ரயிலில் ஒரு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பி இந்த பயணக்கட்டுரையை மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன்.

பயண நாட்களுடன் சேர்த்து மொத்தம் பதினேழு நாட்கள் கொண்ட அந்த சுற்றுலாவில் நான்கு ஊர்கள் அடங்கும். அவை ஜெய்ப்பூர், ஆக்ரா, சிம்லா மற்றும் புது டெல்லி ஆகியவை. இந்த நான்கு ஊர்களிலும் நாம் பார்த்து ரசித்த இடங்களைப்பற்றியும் அதன் அனுபவங்களையும் ஒவ்வொன்றாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

1. ஜெய்ப்பூர்

சென்னையிலிருந்து வாரம் இரு முறை செல்லும் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 37 மணி நேர பயணத்தில் ஜெய்ப்பூர் சென்றடைந்தோம். இரண்டு நாட்கள் ஜெய்ப்பூரில் தங்கி வரலாற்று சிறப்பு மிக்க சில இடங்களை பார்த்தோம். அதில் பழங்கால சின்னங்களான ஜெய்ப்பூர் நகர அரண்மணை (City Palace)  மற்றும் ஹவா மஹால் (Hawa Mahal) போன்ற இடங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தன. பழங்கால மன்னர்கள் உபயோகப்படுத்திய வானவியல் ஆராய்ச்சி பூங்காவான ஜந்தர் மந்தர் (Jantar Mantar Observatory) நம்மை மிகவும் கவர்ந்த ஒன்று என்று சொல்லலாம். பழங்காலத்தில் புயல், மழை மற்றுமுள்ள அனைத்து விதமான வானவியல் நிகழ்வுகளையும் அதில் உள்ள பல வகையான வானவியல் கருவிகளைக்கொண்டு கணித்து சொல்வதற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஜெய்ப்பூர் மாநகரத்தின் மையப்பகுதியில் ஒரு பரந்த பகுதியில் அமைந்திருக்கிறது ராம் நிவாஸ் கார்டன் (Ram Nivas Garden) என்ற ஒரு பூங்கா. அந்த பூங்காவில் ஆல்பர்ட் மியூசியம் (Albert Museum) என்ற அருங்காட்சியகம், ஜெய்ப்பூர் மிருகக் காட்சி சாலை (Jaipur Zoo)  மற்றும் பறவைகள் பூங்கா (Birds Park) அமைந்திருக்கின்றன. ஜெய்ப்பூர் மிருகக் காட்சி சாலையில் வெள்ளைப் புலியை  (White Tiger) பார்க்க அழகாக இருந்தது.  ஜெய்ப்பூர் கோட்டைகளுக்கு பிரபலமான மாநகரமாக விளங்குகிறது.

ஜெய்ப்பூருக்கு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆம்பர் கோட்டை (Amber Fort) என்ற ஒரு புகழ்பெற்ற கோட்டை இருக்கிறது. ஆம்பர் என்ற ஊரின் ஒரு மலையின் உச்சியில் அமைந்திருக்கும் அந்த கோட்டை பழங்கால ராஜபுத்திர மன்னர்கள் ஆண்டு வந்த கோட்டையாக இருந்திருக்கிறது. ஏராளமான படிக்கட்டுக்களில் ஏறி அந்த கோட்டைக்குள் செல்வது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நேரமின்மையால், மற்ற கோட்டைகளான ஜைகார் கோட்டையையும் (Jaigarh Fort) நஹர்கார் கோட்டையையும் (Nahargarh Fort) பார்க்க முடியாமல் போனது ஒரு வருத்தம்தான்.

அதை அடுத்து ஜைபூரின் முக்கிய கடைத்தெருக்களில் ஒன்றான மிர்ஜா இஸ்மாயில் ரோடு பகுதிக்குச் சென்றோம். ஜெய்ப்பூரில் உள்ள அனைத்து இடங்களையும் பார்ப்பதற்கு இரண்டு நாட்கள் என்பது மிகவும் குறைவான ஒன்றுதான். ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு முடிந்த வரை அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு அடுத்து ஆக்ராவுக்கு பயணமானோம்.

2. ஆக்ரா

உலக அதிசயங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஆக்ராவுக்கு பயணத்தை துவங்கினோம். ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு 5 மணி நேர பயணத்தில் ஆக்ராவை சென்றடைந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். முதல் நாள் முழுவதும் தாஜ்மஹால் வளாகத்திலேயே கழிக்க வேண்டும் என்றெண்ணி கிளம்பினோம். நுழைவுக்கட்டணம் 20 ரூபாய் செலுத்தி தாஜ்மஹாலுக்கான நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். அதற்கு உள்ளே செல்வதற்கு மொத்தம் மூன்று நுழைவாயில்கள் உள்ளன.

முதன்முறையாக தாஜ்மஹாலை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருந்ததென்னவோ உண்மைதான். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, புது டில்லி வரை சென்றுவிட்டு ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் திரும்பி வந்த குறையை நிறைவேற்ற இந்த முறை வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. யமுனை நதிக்கரைக்கு தெற்கே அமைந்திருக்கும் அழகான தாஜ்மஹால் முழுவதும் பளிங்கு கற்களாலேயே கட்டப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இத்தனை வருடங்கள் ஆகியதால் அதன் பொலிவு கொஞ்சம் குறைந்து இருக்கலாம், ஆனால் அதன் அழகு மாறி இருக்காது என்றே தோன்றியது. அதன் உட்பகுதியில் மிகவும் இருட்டாக காணப்பட்ட இடத்தில் மும்தாஜ் மற்றும் ஷாஜஹானுடைய கல்லறைகள் இருந்தன.

தாஜ்மஹால் வளாகத்தின் (Tajmahal Complex) உள்ளே இருக்கும் தாஜ்மஹாலையும் சேர்த்து அதன் அருகிலேயே இருக்கும் பள்ளி வாசலும், அருங்காட்சியகமும் அழகாக இருந்தன. மாலை நேர சூரியன் மறையும் வெளிச்சத்தில் தாஜ்மஹாலை ரசித்து விட்டு வெளியே வந்து கடைத்தெருவில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட சில குட்டி தாஜ்மஹால்களையும் வாங்கி வரத் தவறவில்லை.

Indiaஅடுத்த நாள், ஆக்ராவிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஃபதேஹ்பூர் சிக்ரி (Fatehpur Sikri) க்கு உத்தர பிரதேச மாநிலத்தின் உள்ளூர் பேருந்தில் சென்றது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஃபதேஹ்பூர் சிக்ரியில் இடிந்து போன பல பாழடைந்த கட்டிடங்கள் காணப்பட்டன. அவைகளுக்கு மத்தியில் ஒரு மிகவும் அழகான ஒரு கட்டிடம் என்றால் அங்கே இருந்த ஒரு பழைய பள்ளிவாசல்தான். புது டில்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜிதை போன்று மிகப்பெரிய பள்ளி அது. சிறப்பு மிக்க வெள்ளிக்கிழமை தொழுகையை அங்கே தொழும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடமான ஆக்ரா கோட்டை (Agra Fort) க்கு சென்றோம். ஆக்ராவை முகலாய மன்னர்கள் தங்கள் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள் என்பதும் அவர்கள் இந்த ஆக்ரா கோட்டையையே பயன்படுத்தினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பிறகு, யமுனை நதியின் மற்றொரு கரையில் தாஜ்மஹாலுக்கு எதிரே அமைந்திருக்கும் குட்டி தாஜ்மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள சில இடங்களை பார்த்து விட்டு சிம்லா நோக்கி நம் பயணம் தொடர்ந்தது.

3. சிம்லா

இந்தியாவின் புகழ்பெற்ற மலைப்பிரதேசங்களில் ஒன்றான சிம்லாவிற்கு செல்ல ஆக்ராவிலிருந்து புறப்பட்டோம். ஆக்ராவிலிருந்து கல்கா (Kalka) என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து மலை ரயிலில் சிம்லா நோக்கி புறப்பட்டோம். சிம்லாவின் மலை ரயில் பயணம் அழகான ஒரு அனுபவமாக இருந்தது. நம்மில் சில பேருக்கு நீலகிரியின் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயிலில் சென்ற அனுபவம் இருக்கும். இதுவும் அதைப்போன்ற பயணம்தான் என்றாலும் இது நீண்ட தூர பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களின் சில நாட்களில் மட்டுமே சிம்லாவில் பனிப்பொழிவு ஏற்பட்டு ஊரெங்கும் பனிக்கட்டியாக காட்சியளிக்கும் என்பதை உறுதி செய்துக்கொண்டுத்தான் அந்த நேரத்தில் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தோம். நாம் எதிர்பாத்தது போலவே, பனிப்பொழிவு மற்றும் ஊரெங்கும் படர்ந்திருந்த பனிக்கட்டியை ரசித்தது, பனிக்கட்டி மலைகளின் மேல் குழந்தைகளுடன் விளையாடியது, பனிக்கட்டி படர்ந்த சாலைகளின் மேல் வாகனத்தில் சென்றது எல்லாமே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

சிம்லாவின் முக்கிய கடைத்தெருக்களான மால் ரோடு (Mall Road), லக்கர் பஜார் (Lakkar Bazaar)  மற்றும் லோயர் பஜார் (Lower Bazaar) மிகவும் அழகாக இருந்தன.  சிம்லா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய இடங்களான ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய வைஸ் ரீகல் லாட்ஜ் (Vice Regal Lodge - Indian Institute of Advanced Studies) மற்றும் சிம்லா மாநில அருங்காட்சியகம் (Shimla State Museum) போன்ற இடங்கள் அருமையாக இருந்தன. சிம்லா கோயில்களுக்கும் பிரசித்தி பெற்ற ஊராகும். ஜக்கு மலையின் மேல் அமைந்திருக்கும் ஜக்கு கோயில் (Jakku Temple), வைஷ்ணவி தேவி கோவில் மற்றும் தாரா தேவி கோவில் அதில் பிரசித்தி பெற்றவை.

சிம்லாவுக்கு வெளியில் புகழ்பெற்ற சில ஊர்களான சம்மர் ஹில்(Summer Hill), நல்டேஹ்ரா (Naldehra), நர்கண்டா (Narkanda), சைல் (Chail), மஷோப்ரா காடுகள் (Mashobra Forest), ஃபாகு (Fagu) மற்றும் குஃப்ரி (Kufri) ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலா தளங்களாகும். எங்கு சென்றாலும் பனிக்கட்டி மலைகளையே காண முடிந்தது. பச்சை பள்ளத்தாக்கு (Green Valley),  ஆப்பிள் தோட்டங்கள், கோல்ப் மைதானங்கள், குதிரை சவாரிகள் நம்மை மிகவும் கவர்ந்தன.

சிம்லாவை அடுத்த முக்கிய ஊரான குஃப்ரி (Kufri) சென்றோம். சிம்லா செல்பவர்கள் குஃப்ரி செல்லாமல் திரும்புவதில்லை. குஃப்ரி பன்னாட்டு பனிச்சறுக்கு விளையாட்டுக்கு (International Winter Sports Festival) மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஊராகும். ஹிமாலையன் இயற்கை பூங்கா (Himalayan Nature Park)  என்ற விலங்குகள் சரணாலயம் முழுவதும் பணியால் படர்ந்திருந்தது.

பனிப்பிரதேசங்களில் மட்டுமே வாழக்கூடிய மிருகங்களான போலார் பியர் (Polar Bear), பனி சிறுத்தை (Snow Leopard) போன்ற பல அறிய வகை மிருகங்களைக் காண வாய்ப்பு கிடைத்தது. குதிரையில் பனிமலைகளின் மேல் சவாரி செய்து சில பனிச்சிகரங்களை காணலாம். சுவிட்சர்லாந்து போன்ற மேலை நாடுகளில் காணப்படுவதுபோல் எங்கு பார்த்தாலும் பனிமலைகள்தான். அவை நம் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

நாம் சிம்லாவில் தங்கி இருந்த நான்கு நாட்களுமே கடுமையான குளிராக இருந்தது. மைனஸ் எட்டு டிகிரி செல்சியஸ்ஸை (Minus 8 Degree Celsius) ஒட்டியே அனைத்து நாட்களும் கழிந்தன. பனிப்பொழிவின் காரணமாக சில இடங்களுக்கு செல்லக்கூடிய வழிகள் அடைக்கப்பட்டும் இருந்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நாம் தங்கி இருந்த ஹோட்டல் மூலமாக ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மனதிற்கும் உடலுக்கும் கிடைத்த கடுங்குளிரை அனுபவித்துவிட்டு சிம்லாவை விட்டுப் பிரிய மனமில்லாமல் நாட்டின் தலைநகரத்தை நோக்கி நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

4. புது டில்லி

சிம்லாவிலிருந்து இந்தியாவின் தலைநகரான புது டில்லியை சென்றடைந்தோம். புது டில்லி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் முக்கிய இடமான பாஹர்கன்ஜ் (Paharganj) என்னும் இடத்தில் தங்கினோம். மத்திய டில்லியின் மிக முக்கியமான இடமான கொனாட் பிளேஸ் (Connaught Place) மற்றும் அதனை சுற்றியுள்ள ராஜ்பாத் (Rajpath) ஆகியவை மிகவும் அழகான இடங்களாகும். பாராளுமன்றம், ராஷ்ட்ரபதி பவன், சுப்ரீம் கோர்ட், மத்திய அருங்காட்சியகம், இந்தியா கேட் மற்றும் முக்கிய அமைச்சகங்கள் அனைத்தும் ராஜ்பாத்தை சுற்றியே அமைந்திருக்கின்றன.

Indiaபழைய கோட்டை, மிருகக்காட்சி சாலை, இந்திரா காந்தி கொல்லப்பட்ட இடமான அருங்காட்சியகம் (Indira Gandhi Memorial Museum), காந்தி கொல்லப்பட்ட இடம் (Gandhi Smriti) மற்றும் சில முக்கிய முகலாய மன்னர்களின் கல்லறைகள் மத்திய டில்லியிலேயே அமைந்திருப்பது சிறப்பாகும். டில்லியின் மையப்பகுதில் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கும் லோடி கார்டன் (Lodhi Garden) என்ற பூங்கா பார்க்க மிகவும் அழகான ஒன்றாக இருந்தது.

அடுத்து, டில்லியின் முக்கிய வர்த்தக இடமான சாந்தினி சவுக் (Chandni Chowk) பகுதிக்கு சென்றோம். இது பழைய டில்லியில் (Old Delhi) அமைந்துள்ளது. மிகவும் பழமையானதாக காணப்படும் இந்த பகுதியில் ஏராளமான கடைத்தெருக்கள் இருக்கின்றன. ஜவுளி மற்றும் அனைத்து வகை பொருட்களும் இங்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் மிகப்பழமை வாய்ந்த பள்ளிவாசலான ஜும்மா மஸ்ஜித் (Jama Masjid) மற்றும் செங்கோட்டை (Red Fort) இந்த பகுதியிலேயே அமைந்திருக்கின்றன.

ஜும்மா மஸ்ஜித் பள்ளியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை தொழுதுவிட்டு அதன் வளாகத்திலுள்ள மினா பஜார் என்னும் கடைத்தெருவில் விலை மலிவாக சில பொருட்களை வாங்கிக்கொண்டு பழைய டில்லியின் மற்றொரு பகுதியில் அமைந்திருக்கும் ராஜ்காட் (Rajghat) என்று அழைக்கப்படும் காந்தி சமாதியைக் காணச்சென்றோம். காந்தி சமாதி அமைந்திருக்கும் அந்த பூங்கா மிகவும் அமைதியாகவும் பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்டும் அழகாக காணப்பட்டது.

அடுத்து, தெற்கு டெல்லியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற குதுபு மினாருக்கு (Qutab Minar) சென்றோம். குதுபு மினார் வளாகத்தின் உள்ளே உலகிலேயே மிக உயரமான கல் தூணாகிய பன்னிரெண்டாம் நூற்றாண்டின் குதுபு மினார் கோபுரம் (Qutab Minar Stone Tower), நான்காம் நூற்றாண்டின் இரும்புத்தூண் (Iron Pillar), பழங்கால குவ்வத்துல்-இஸ்லாம் பள்ளிவாசல்(Quwwat-ul-Islam Masjid) மற்றும் சில முகலாய மன்னர்களின் கல்லறைகள் அனைத்தும் மிகுந்த இடிபாடுகளுடன் காணப்பட்டன.

அடுத்து தாமரைக்கோயில் (Lotus Temple) என்று அழைக்கப்படும் பஹாய் வழிப்பாட்டு இடத்திற்கு (Baha’i House of Worship) சென்றோம். சிலைகள் எதுவுமே காணப்படாத மிகவும் அமைதியான இடமான இதில் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் பிராத்தனை பண்ணுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மன அமைதியைத் தேடிச் செல்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமான இது நம்மை மிகவும் கவர்ந்தது.

மற்ற ஊர்களைப் போலல்லாமல், டில்லியை சுற்றித்திரிவதற்கு நமக்கு எந்த வித சிரமமும் ஏற்படவில்லை. டில்லி மெட்ரோ ரயிலிலேயே எல்லா இடங்களுக்கும் செல்வதற்கு வசதியாக இருந்தது மட்டுமல்லாமல் பயண நேரத்தையும் கொஞ்சம் பணத்தையும் மிச்சப்படுத்த முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ், அனைத்து இடங்களையும் நல்ல முறையில் மகிழ்ச்சியாக சுற்றிப் பார்த்துவிட்டு வாராந்திர புது டில்லி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் வந்தடைந்தோம்.

எத்தனையோ நாடுகளுக்கு நாம் சென்றிருப்போம். என்னதான் மற்ற நாடுகளின் அழகை நாம் ரசித்திருந்தாலும், நம் தாய்நாடாகிய இந்தியாவின் அழகை ரசிப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது.

சகோதரர்களே, இந்த நீண்ட கட்டுரையை பொறுமையாக படித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
 
- B. அலி அப்பாஸ்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016 19:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # S.I.GHOUSE HAMEED. 2013-04-15 23:00
vaztthukkal ungal payana anubavatthi engalodu pagirnthu kondatharku mikka nadrey.

An budan
S.i..Ghouse Hameed.saudi
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh