MYPNOSat03242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

சி.ஏ. ஆகலாம் சிம்பிளாக!

  • PDF

இந்திய சார்ட்டட் அக்கவுன்ட்டன்ஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் தலைவர் ஜி.ராமசாமி. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டிங் துறையில் இருப்பவர். வருமான வரி கமிட்டி உள்பட, மத்திய அரசாங்கம் அமைத்த 25-க்கும் மேற்பட்ட கமிட்டிகளில் அங்கம் வகித்த இவர், இன்டர்நெட் மூலம் வரி தாக்கல் செய்யும் 'இ-பைலிங்’ குறித்து பல முக்கிய யோசனைகளை அளித்தவர்.

சி.ஏ. பரீட்சைக்கான தேர்வுக் குழுவிலும் இவருக்குப் பெரும் அனுபவம் உண்டு. சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை நாம் சந்தித்தபோது, நம் மாநிலத்தில் இருந்து இன்னும் நிறைய சி.ஏ-க்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''இன்றைய தேதியில் இந்தியா முழுக்க 7 லட்சம் மாணவர்கள் சி.ஏ. படிக்கிறார்கள். ஆனால், கடைசி பரீட்சையில் பாஸாகி ஆடிட்டராவது என்னவோ வெறும் 10 ஆயிரம் பேர்தான். சி.ஏ. பரீட்சையில் பாஸ் செய்வதை ஏறக்குறைய முடியாத செயலாகப் பலரும் நினைக்கிறார்கள். இது முழுக்கத் தவறு. சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நானே சி.ஏ. ஆகியிருக்கிறேன். மற்றவர்களால் முடியாதா என்ன?

அண்மையில் சி.ஏ. படித்து முடித்த ஒரு மாணவரைச் சந்தித்தேன். 'உன் அப்பா என்னவாக இருக்கிறார்?’ என்று கேட்டதற்கு, 'பால்காரர்’ என்றார். பால் கறந்து விற்கிற ஒருவரால் தன் மகனை சி.ஏ-வுக்கு படிக்க வைக்கிற அளவில்தான் செலவு இருக்கிறது.

சி.ஏ. படிப்பது என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டால், அசாத்திய உழைப்பு தேவை. கம்பெனிச் சட்டங்கள், வரிவிதிப்பு விதிகள், கணக்கெழுதும் முறைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படித்தால், மூன்றாண்டுகள் முடிவில் நீங்கள் சி.ஏ. ஆவது உறுதி.

இன்றைக்கு அத்தனை நிறுவனங்களும் தங்களின் பேலன்ஸ்ஷீட்டை ஒரு ஆடிட்டரிடம் கொடுத்துத் தணிக்கை செய்ய வேண்டும். ஆடிட்டர் தணிக்கை செய்த பேலன்ஸ்ஷீட்டுக்கு வங்கிகள் எளிதாகக் கடன் கொடுக்கின்றன. மக்களும் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நம்பிக்கை வைக்கத் தொடங்குகின்றனர். எனவே, இந்த வேலையில் கை நிறையச் சம்பளம் கிடைக்கும் என்பது நிதர்சனம். இன்றைக்கு சி.ஏ. படித்து முடித்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே 60 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. உள்நாட்டில்தான் வேலை என்றில்லை, நமது கடுமையான உழைப்புக்கும், அறிவுத்திறனுக்கும், நேர்மைக்கும் நல்ல சம்பளத்தோடு வெளிநாடுகளிலும் வேலை கிடைக்கிறது.

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி இப்போது 8 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் 10 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி காணும்போதுஇன்னும் நிறைய ஆடிட்டர்கள் நமக்குத் தேவைப்படுவார்கள். 10-ஆம் வகுப்பு படிக்கும் உங்கள் மகனையோ அல்லது மகளையோ இப்போதே நீங்கள் தயார் செய்ய ஆரம்பித்தால், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கை நிறையச் சம்பாதிக்கலாம்!'' என்கிறார்.

அட, நல்ல யோசனையாத்தான் இருக்கு!

- ஏ.ஆர்.குமார்
படம் : வி.செந்தில்குமார்

ஆனந்த விகடன் 16.03. 2011

Comments  

 
0 # Dr.shaik kamil 2013-04-21 17:47
Insha Allah Muyarchi Thiruviyaku
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh