Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

  • PDF

பசியினையே பசியறியார் புரிந்திடவே

  பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே !

“பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே !

  பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே !

பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி !

  பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி !

ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி !

  ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி !

கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் !

  கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் !

கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக்

  காணிக்கை செய்திடுவான் காமத்தை !

சுட்டுவிழிப் பார்வையிலே சுருண்டுபோகும்

  சுந்தரியைச் சீண்டியுமே பார்க்கமாட்டான் !

கட்டுடலைக் கட்டிவைப்பான் இறைவனுக்கு !

  காளையவன் தேர்ந்துவிட்டான் சுவனத்திற்கு !

நேர்மையுடன் உழைத்தெடுத்த பொருளிருக்க

  நேர்த்தியுடன் சமைத்தெடுக்கப் பெண்ணிருக்க

ஆர்வமுடன் படைத்துவைக்கத் தாயிருக்க

  ஆவலுடன் உண்பதற்கு மனமிருக்க -

பார்படைத்த பேரிறையின் அருளைத்தேடி

  பக்தியுடன் பசியினையே தியாகம்செய்வான் !

சீர்மிகுந்த சொர்க்கமதைத் தெரிவுசெய்வான் !

  சத்தியமாய் சொர்க்கவாசி இவரே காண்பீர் !

பழமிருக்க பாலிருக்கப் பழச்சாறிருக்க

  பளிங்குகளின் கிண்ணங்களும் அழகாயிருக்க

பழகிவந்த நண்பர்களும் பக்கமிருக்க

  பாங்குடனே ஊற்றிவைத்தும் மனம்வெறுக்க

அழகுமிகு ரமளானைக் கருத்தேகொண்டு

  அத்தனையும் ஒதுக்கிவைத்துத் தாகித்திருப்பார் !

அழகுடனே ‘முப்பசி’யும் வென்றமுஸ்லிம்

  அருளுடனே சொர்க்கமதில் வீற்றிருப்பார் !

-மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ 

புதன்கிழமை, 17 ஜூலை 2013 13:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh