பல்லாண்டு கடந்தாலும்
பார்த்திடலாம் நம்காட்சி
சொல்லாக, படமாக,
சேர்த்துவைத்த ஃபேஸ்புக்கில்.
எழுதிவைத்த குறிப்பைத்தான்
எடுத்துவைக்கும் ஃபேஸ்புக்கும்
பழுதுகளைத் தவிர்த்தபடி
பாராட்டே முன்வைக்கும்.
நிம்மதியைத் தேடவிட்டு
நேரத்தைக் கொன்றபடி
நம் மதியை மூழ்கடிக்கும்
நலம்சிலவே ஃபேஸ்புக்கில்!
நல்லதுவும் கெட்டதுவும்
நிரப்புகின்ற ஃபேஸ்புக்கில்
உள்ளதுவா ஆச்சர்யம்?
உளநூலை அறிவாயா?
முகநூலில் உன்பெருமை
முழுமூச்சாய் பதிகின்றாய்
அகநூலில் ஒவ்வொன்றும்
அச்சாதல் அறிவாயா?
எல்லாமும் பதிந்திருக்கும்
ஏ -ட்டு-ஸட் அகநூலில்
அல்லாஹ்வே! அற்புதம்தான்
அத்தனையும் மனம்காணும்.
சிறுசெயலை; பெருஞ்செயலை
சிந்தனையில் உதிப்பதையும்
குறிக்கின்றார் வானவர்தாம்
கியாமத்தில் காட்சிக்காம்.
உலகமிதன் பார்வையிலே
உயர்வென்பார் ஃபேஸ்புக்கை
உலகமுமே ஃபேஸ்புக்தான்
உணர்ந்திடுவோம் மறுமையிலே!
Comments
நேரத்தைக் கொன்றபடி
நம் மதியை மூழ்கடிக்கும்
நலம்சிலவே ஃபேஸ்புக்கில்!// அருமை
RSS feed for comments to this post