Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

தலையங்கம்: வளம் குன்றா வல்லம் போன்று பசுமை மாறா பரங்கிப்பேட்டை சாத்தியமா?

  • PDF
வல்லம் பேருராட்சி அலுவலகம்
குப்பைகளை உரமாக மாற்றி, சுகாதாரத்தோடு வருமானத்தையும் பெருக்கி வருகிறது வல்லம் பேரூராட்சி.

தஞ்சாவூருக்கு அருகிலுள்ளது வல்லம் பேரூராட்சி. இந்தப் பேரூராட்சி முழுவதும் ஒருங்கிணைந்த சுகாதார முறையில் வளம் குன்றா வல்லம் என்ற பெயரில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வல்லம் பேரூராட்சி முழுவதும் கொட்டப்படும் குப்பைகள் வீடுதோறும், தெருக்கள்தோறும் தினமும் சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாகப் பிரித்து அவற்றைப் பயனுள்ள முறையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு பிரிக்கப்பட்ட மக்கும் குப்பையைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.மண்புழு உரம் தயாரிக்கக் தனி கிடங்கு கட்டப்பட்டு அதன்மூலம் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 500 கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் தூளாக்கும் இயந்திரங்கள் மூலம்  தூளாக்கப்பட்டு அவற்றைக்கொண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன. மண்புழு உரம் மற்றும் பிளாஸ்டிக் தூள்களை விற்பனை செய்வதன் மூலமும் பேரூராட்சிக்குக் கணிசமான வருமானம் வருகிறது. மேலும் இவர்கள் தயாரித்த மண்புழு உரத்தைக் கொண்டு பேரூராட்சியில் தரிசாகக் கிடந்த இடங்களில் இயற்கை முறையில் காய்கறி உற்பத்தியும் செய்துவருகின்றனர்.

எங்கள் பேரூராட்சியில் நிறைய கல்லூரிகள்,தொழில் நிறுவனங்கள் உள்ளதால் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்துகொண்டே இருக்கும். இது எங்களுடைய சுகாதாரத்திற்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. மேலும் இது போல குப்பைகளை சேகரித்து வேறு இடங்களில் கொட்டினாலும் அவை மக்காமல் கிடந்து கொசுக்கள் உருவாவதற்குப் புகலிடமாக மாறியது. கொசுக்களும், குப்பைகளும் பல நோய்களுக்கு மூலக் காரணம் என்பதால். எங்கள் பேரூராட்சியின் ஒவ்வொரு இடத்திலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு குப்பைத் தொட்டிகளை வைக்க ஆரம்பித்தோம்.இவ்வாறு பிரித்து வைத்தவுடன் மக்களும் ஒத்துழைத்து குப்பைகளைப் பிரித்துக் கொட்ட ஆரம்பித்தனர். குப்பைகளைப் பிரித்துக் கொட்டி வைப்பது முதல்கட்ட வெற்றிக்கு வழிவகுத்தது" என்கிறார் இளநிலை உதவியாளர் ஜெயபால்.

குப்பைகளைப் பிரித்து விட்டோம். இருந்தாலும் குப்பையை ஏதேனும் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்த முடியுமா என சிந்தித்தோம்.அவ்வாறுதான் இந்த மண்புழு உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது. அரசின் உதவியுடன் பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மண்புழு தயாரிக்கும் கிடங்கு கட்டினோம்.பேரூராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து அவற்றை மறுபடியும் பிரித்தெடுத்து மண்புழு தயாரிக்கும் கிடங்கில் கொட்டி, தண்ணீர் மற்றும்  சாணத்தைத் தெளித்து மொழுகி விடுவோம். அதில் கொஞ்சம் மண்புழுவையும் விடுவோம். அவை ஒரு மாதத்தில் பல்கிப் பெருகி அந்தக் குப்பைகளை மக்கச்செய்து தரமான உரமாக மாற்றியது. இவ்வாறு உற்பத்தி செய்த உரத்தைக் கொண்டு எங்கள் பேரூராட்சியில் தரிசாகக் கிடந்த இடங்களில் காய்கறிகளை விளைவித்தோம். இதனைத் தவிர்த்து 500 கிலோ உரத்தை பேரூராட்சி மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளோம்.

மக்காத குப்பைகளை எல்லாம் சேகரித்து அவற்றை பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரம் மூலமாக தூளாக்கி, பேரூராட்சியில் செய்யப்படும் சாலை வேலைகளில் தாருடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதால் சாலைகளும் தரமாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடும் தவிர்க்கப்படுகிறது" என்கிறார் சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன்.

 இவ்வாறு குப்பைகளைப் பிரித்து அவற்றைப் பயனுள்ள வகையில் மாற்றிய உடனேயே எங்கள் பேரூராட்சி முழுவதும் சுகாதாரமாக மாறி, சாலைகள் குப்பைகளின்றி அழகாக இருக்கின்றன. அதைப்போல நோய்களும் பெருமளவில் குறைந்துள்ளன. இதனால் பேரூராட்சி முழுவதும் மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்து வருகிறோம். இதனைத் தவிர்த்து பேரூராட்சி முழுவதும் உள்ள நீர்நிலைகளை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.முதல்கட்டமாக பழங்காலத்துக் குளங்களை தூர்வார ஆரம்பித்துள்ளோம்.
 
மக்கும் குப்பை வண்டி
எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் அரசும் எங்கள் பேரூராட்சியில் உள்ள கல்லூரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. நாங்கள் மேற்கொள்ளும்  அனைத்துப் பணிகளும் முழுமையடைந்தவுடன் கண்டிப்பாக வல்லம் பேரூராட்சி வளம் குன்றா வல்லமாக மாறும்" என்கிறார் பேரூராட்சித் தலைவர் சிங்.ஜெகதீசன்.

குப்பையால் ஏற்படும் சீர்கேடுகளில் சிக்கித் திணறும் பல ஊர்களுக்கு சுகாதாரத்தைப் பெருக்கி, வருமானத்தையும் ஈட்டும் வழிகாட்டியாகத் திகழும் வல்லம் பேரூராட்சி நல்லதொரு  முன்னுதாரணம்.  வல்லம் பேரூராட்சியின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை http://www.vkv.org.in என்ற இணையதளத்தில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
 
இது போன்று பரங்கிப்பேட்டை பேரூராட்சிலும் நடைமுறைப்படுத்தினால் பசுமா மாறா பரங்கிப்பேட்டை உருவாகும். சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இது குறித்து ஆலோசனை செய்வார்களா? நமதூர் மக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்களா? 
 
சு. வீரமணி உதவியுடன் 

வியாழக்கிழமை, 12 ஜூன் 2014 16:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh