Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அல்லாமா இக்பாலின் பிறந்த தின சிறப்பு பகிர்வு

  • PDF
அல்லாமா இக்பால் பாரசீகம் மற்றும் அரபி மொழியில் பாடிய மகத்தான கவிஞர் மற்றும் சிந்தனையாளர். பாகிஸ்தான் என்கிற கருத்தாக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் அவர் முதன்மையானவர் என்றாலும் அவரின் வாழ்க்கை வெகு சுவாரசியமானது. 

முகமது இக்பால் தற்போதைய பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்தார். அப்பா தையல் வேலைகள் செய்து வந்தவர். இக்பாலின் மூதாதையர்கள் காஷ்மீரி பண்டிட்கள். வீட்டில் நேர்மை மற்றும் இறை நம்பிக்கை என்பது முக்கியமான பண்புகளாகச் சொல்லித்தரப்பட்டன. அப்பாவுக்கு ஒரு தையல் இயந்திரத்தை அரசாங்க அதிகாரி பரிசளிக்க முன்வந்த பொழுது அது பாவப்பட்ட பணத்தால் வந்தது,அதை வாங்கக்கூடாது என்று இக்பாலின் தாய் இமான் பிபி தடுத்தார். அண்ணன் அட்டா முகமதின் வருமானத்தில் படித்தார் இக்பால். 

முர்ரே கல்லூரியில் படித்த பின்பு,லாகூரின் அரசு கல்லூரியில் அரபி,ஆங்கில இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றைப் பயின்றார். தாமஸ் அர்னால்ட் என்கிற ஆசிரியர் அவருக்கு அங்கே கிடைத்தார். அர்னால்ட் ‘இஸ்லாமை போதித்தல்’ என்கிற புத்தகத்தில் வாளால் பரவிய மதம் என்று கருதப்பட்ட இஸ்லாம் பல சமயங்களில் அமைதி வழியில் பரவியது என்று ஆதாரங்களோடு பேசினார். அவரால் இக்பால் தாக்கமுற்றார். 

சட்டம் படிக்க முயன்று நுழைவுத்தேர்வில் தோற்றார் இக்பால். பின்னர் அரசாங்க வேலைக்குப் போக விண்ணப்பித்தால் மருத்துவத் தகுதியில்லை என்று கைவிரித்தார்கள். அவர் இந்தக் காலத்திலேயே சிறந்த கவிஞராக மாறியிருந்தார். 

அவரின் தரானா கவிதையில்...
 
‘பிராமணனே ! கல்லால் ஆன கடவுள்கள் புனிதமாகச் சிரிக்கின்றன 
இந்தத் தேசத்தின் ஒவ்வொரு துகளும் புனிதமே 
வேற்றுமையின் அடையாளங்களை எல்லாம் அழித்து 
அன்னை மண்ணில் புத்தம்புதிய ஆலயம் ஆக்குவோம் 
வானின் விளிம்பு தொடும்வரை எழுவோம் 
உலகவாசிகள் அன்பால் உய்வுறட்டும்’ எனப்பாடினார். 

தரானா-இ-ஹிந்தில் ,’கங்கை,இந்தியா உலகிலேயே அழகிய தேசம்.இங்கே கீதம் பாடும் குயில்கள் நாங்கள்.’என்று பாடிய அவர் ஆறு வருடங்கள் கழித்துப் பாடிய தரானா-இ-மில்லியாவில் ,’டைக்ரிஸ் நதி,மத்திய ஆசியா,அரேபியா என்று நகர்ந்து இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் தன் தேசக்கனவை அவர் பேசினார். 

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் தத்துவமும்,காந்தி மற்றும் ஜின்னா படித்த லிங்கன்ஸ் இன் கல்லூரியில் சட்டமும் பயின்றார். பாரசீக மெய்விளக்கவியலில் முனைவர் பட்டம் பெற்றார். உருதுவில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த இக்பால் பாரசீக மொழிக்கு மாறினார். “நான் சிறைப்படுதலில் விடுதலை அடைந்தேன்” என்று கவிபாடிய அவர் பல்வேறு சிந்தனைகளில் தாக்கமுற்றார். நீட்சேவின் ‘தன்னை முன்னிறுத்தல்’ கோட்பாடும்,பெர்க்ச்னின் இயங்கியலும் அவரை ஈர்த்தன. 

“மேற்கில் அன்பு செத்துவிட்டது ; காரணம் அது மதமற்றதாக இருப்பதே அதற்குக் காரணம்” என்றவர் தான் மற்றும் பிற நம்பிக்கையாளர்கள் பின்பற்றுவது உண்மையான இஸ்லாமில்லை என்று அழுத்தமாகச் சொன்னவர் , சூஃபிக்களை நிராகரிக்க ஆரம்பித்தார். வேதாந்தத்தோடு ஒத்துப்போய் அஹம் பிரம்மஸ்வாமி என்பது இறைவன் என்கிற கடலில் கலக்கும் ஒரு துளியாக மனிதனை பார்க்கையில்,இவரோ மனிதன் இறைவனுக்குச் சேவை செய்யும் முத்தாக மட்டுமே பார்த்தார். 

ஹூதி என்கிற தத்துவத்தை முன்னிறுத்தினார். மனிதன் தன்னுடைய சுயத்தில் கவனம் செலுத்தவேண்டும். தன்னை உணர்ந்து,தன்னை மனிதன் முன்னிறுத்த வேண்டும் அது செருக்கை கொண்டதாக அதே சமயம் இருக்கக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது. நீட்சேவின் தாக்கத்தில் தன்னை முன்னிறுத்தலை அவர் சொன்னாலும்,நீட்சேவின் உலகில் கடவுளுக்கு இடமில்லை. ‘இறைவனைத் தவிர யாரையும் விரும்பவில்லை. இறைவனைத் தவிர வேறு இலக்கில்லை. இறைவனை விட நேசிக்கப் பொருளில்லை. இறைவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்று இக்பால் பாடினார். 

முஸ்தபா கெமால் துருக்கியில் ஆட்சியைப்பிடித்த பொழுது அவரைப் போற்றினார். அதே சமயம் அவர் சர்வாதிகாரி போல ஆண்டதை பின்னர் விமர்சித்தார். ஆரம்பக் காலத்தில் ஜனநாயகப் பூர்வமாக ஆட்சி செலுத்திய நான்கு காலிபாக்கள் காலமே சிறந்த காலம் என்று எழுதினார். இன வேறுபாடுகளுக்கு இஸ்லாமே சிறந்த எதிரி என்று அவர் உறுதியாக நம்பினார். இஸ்லாம் வாளால் பிற்காலத்தில் பரவியது என்றாலும் அதன் அடிப்படையான ஆரம்பகால இலக்குகளில் அது இல்லை. அப்படிப்பட்ட ஒரு இஸ்லாமே இன்றைய தேவை என்று அவர் அறிவித்தார். ‘திறந்த மனதோடு சிலை முன் வழிபடுகிற வேற்றுமதத்தவன் இஸ்லாமின் மீது நம்பிக்கையுள்ள மசூதியில் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனை விட மேலானவன் !” என்று அவர் எழுதினார். 

தன்னுடைய இந்திய வேர்களை விட இஸ்லாமின் அரேபிய வேர்களையே அவர் பெருமைமிகுந்ததாகக் கருதினார். மேற்கின் மறுமலர்ச்சி சிசிலி மற்றும் ஸ்பெயின் வழியாகவே அரேபியாவில் இருந்து சென்ற அறிவு வெளிச்சத்தில் ஏற்பட்டது என்பதையும்,நெப்போலியனின் முன்னோர் அரேபிய வேர்கள் கொண்டவர்கள் என்கிற கருத்தையும்,வாஸ்கோடகாமாவுக்கு வழிகாட்டியவர்கள் அரேபியர்களே என்பதையும் பெருமையோடு நினைவுகூர்ந்தார். 

கிலாபத் இயக்கத்தை விட்டு சீக்கிரமே அவர் விலகினார். 1922 இல் ஆங்கிலேய அரசு அவருக்குச் சர் பட்டம் வழங்கியிருந்தது. சூஃபி தத்துவத்தின் மீது அவர் வெறுப்பைக் கொண்டிருந்தது போலவே அகமதியா இயக்கத்தில் தன்னை இறைத்தூதர் என்று அதை உருவாக்கியவர் சொன்னதால் அதையும் இஸ்லாமின் பகுப்பாக ஏற்க அவரும் மறுத்தார். தன்னைப் படிக்க வைத்த அண்ணன் அதில் சேர்ந்ததும் அவருடனான உறவை துண்டித்துக்கொண்டார். 

வக்கீலாக அவர் செயல்பட்டாலும் அதில் பெரும்பாலும் ஈடுபடாமல் கவிதைகளே இயற்றி வந்தார். பணத்தட்டுப்பாடு பல சமயங்களில் அவருக்கு ஏற்பட்டது. அவரின் மகன் எனக்குக் கிராமபோன் வாங்கித்தாருங்கள் என்று கேட்ட பொழுது ,”ஒலிப்பெட்டியின் ஓசையைக் கேட்காதே என் மகனே ! ரோஜா மற்றும் துலீப்பின் பெருத்த மவுனத்தில் மூழ்கிடு !” என்றார். 'பகுத்தறிவு என்பது நீ போகிற பாதையை தெளிவாக்கும் விளக்கே ! அதுவே இறுதி இலக்கு அல்ல !" என்று அவர் அறிவுறுத்தினார். 

பஞ்சாபில் இருந்து முஸ்லீம்களுக்கான இடத்தில் தேர்தலில் நின்று மூவாயிரம் ஓட்டு வித்தியாசத்தில்  வென்றார். 1930 ஆம் வருடம் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு என்று பஞ்சாப்,சிந்த்,பலூசிஸ்தான்,வடமேற்கு மாகாணங்கள் இணைந்த ஒரு நாடு வேண்டும் என்று முழங்கினார். அவர் கண்ட இஸ்லாமிய தேசம் துருக்கியை போல ஆசியாவில் இஸ்லாமியர்களுக்கான ஒரு தேசமாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். பஞ்சாபில் இந்துக்கள் அதிகமாக இருந்த கிழக்குப்பகுதிகளை இந்தியாவுடனே இருக்கலாம் என்றும்,கிழக்கில் இஸ்லாமியர்கள் இருந்த பகுதிகள் தான் கனவு கண்ட பாகிஸ்தான் தேசத்தில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை.. 

பஞ்சாபில் ஜின்னா சிக்கந்தர் கானோடு கூட்டணி அமைத்த பொழுது ,”நிலச்சுவான்தார்களின் தலைவரோடு கூட்டணி போட்டுக்கொண்டு இஸ்லாமுக்குத் துரோகம் செய்துவிட்டார் ஜின்னா !” என்றார். தன்னுடைய மரணப்படுக்கையில் தன்னைப் பார்க்க வந்த நேருவிடம் ,”நீ தேசபக்தன் ! ஜின்னா அரசியல்வாதி !” என்றார். 

இந்திய தேசத்துக்குள் ஒரு இஸ்லாமிய தேசம் என்றே அவர் கனவு கண்டார். ‘உயர்ந்த வகையிலான ஒரு மதவாதத்தை’ தான் தூக்கிப்பிடிப்பதாக அவர் சொன்னார் . ஆனால்,இந்தியர்களுடன் தன் கனவு தேச மக்கள் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளக்கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது. ‘கிழக்கு கடவுள் இருக்கிறானா என்று கேள்வி கேட்கிறது ? நான் கிழக்கைப் பார்த்துக் கேட்கிறேன். மனிதன் இருக்கிறானா’ என்கிற அவரின் கேள்விக்கு விடை தராமல் அவர் கனவு கண்ட தேசம் ரத்தம் மற்றும் மரணங்களுக்கு நடுவே அன்பை மறந்து அமைக்கப்படுவதைப் பார்க்காமலே 1938 இல் மரணமடைந்தார். 'எரியாத உண்மையை தத்துவம் என்பேன். மனதின் தீயால் நிறையும் உண்மையே கவிதை !' என்ற அவரின் கவிதைகள் இன்றும் எழுச்சியூட்டுகின்றன

அவரின் ‘உலகில் உள்ள நாடுகளிலேயே அழகானது இந்தியா !’ என்கிற வரிகளைத் தான் விண்வெளியில் இருந்து ராகேஷ் ஷர்மா இந்தியாவைப் பார்க்கிற பொழுது இந்திரா காந்தியிடம் சொன்னார். 

அவரின் சாரே ஜஹான்சே அச்சா கவிதையின் தமிழாக்கம் இது :
 
ஒட்டுமொத்த உலகை விட அழகானது என் இந்தியா 
எங்கள் அது,அதன் கானக்குயில்கள் நாங்கள் 
அந்நிய பூமியில் இருக்க நேர்ந்தாலும் எங்கள் மனம் அன்னை தேசத்திலேயே அமர்ந்திருக்கும் 
மனமுள்ள இடத்திலே தான் மனிதர்களாகிய நாங்களும் இருப்போம் ? 
வானுக்கு அண்டைவீட்டுக்காரனான உயர்ந்த அந்த மலை 
அதுவே எங்களின் காவலாளி,அதுவே எங்கள் வாசல் பாதுகாவலன். 
அவள் மடியில் பல்லாயிரம் வருடங்களாகப் பாய்ந்து விளையாடுகின்றன நதிகள் 
சொர்க்கம் பொறாமை கொள்ளும் தோட்டம் எங்களுடைய தேசம் 

நீரோடும் கங்கை நதியே ! நினைவில் இருக்கின்றவனவா அந்நாட்கள் ? 
உன் கரையில் எங்கள் மூடிய வண்டிகள் இறங்கிய அந்நாட்கள் ? 
மதங்கள் எங்களுக்குள் பகையைப் போதிக்கவில்லை 
நாங்கள் இந்தியர்கள்,இது இந்தியா 
கிரேக்கம்,எகிப்து,பைஜான்டியம் உலகைவிட்டு அழிந்து போயின 
எங்கள் பெயரும்,அடையாளமும் இன்னமும் உயிர்த்திருக்கிறது 
காலச் சுழற்சி மட்டுமே எங்களுக்கான காலன் 
இக்பால் ! நமக்கான உற்ற நண்பன் உலகிலில்லை 
யாருக்கேனும் மறைந்திருக்கும் நம் வலி தெரியுமா ?

- பூ.கொ.சரவணன்

Add comment


Security code
Refresh