MYPNOThu04262018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இண்டர்வியூக்குப் போறீங்களா?: HR ரகசியங்கள தெரிஞ்சுக்கோங்க!

  • PDF
பத்தே பேர் குப்பை கொட்டும் பத்துக்குப் பத்தில் செயல்படும் மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலைக்கு போனாலும் ஒரு மனுஷன் படும் அவஸ்தைகளுக்கு அளவேயில்லை. வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் இந்தச் சொல்லனாத்துயர் உண்டு. இந்த இருதரப்புப் பற்றியும் காதோடு காதாக பேசவேண்டிய சில சீக்ரெட் விஷயங்களை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு ஐம்பது ஆள் பிடிப்போரிடம் பல தலைப்புகளில் “என்ன? ஏது?”ன்னு கருத்துக் கேட்டுப் போட்டிருந்தார்கள். ந்யூயார்க் போன்ற அமெரிக்க நகரத்திலிருப்பவர்களும் தங்களது வேதனைகளை கொட்டியிருந்ததால் நம்மை நேரடியாக வந்து தாக்குபவைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
 
வேலைக்கு ஆள் அமர்த்தும் படலம் மற்றும் வேலைக்கான ஜாதக ஓலைப் பரிவர்த்தனைப் பற்றியும்:-
 
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தெண்டன் சமர்ப்பித்து விஞ்ஞாபனத்தோடு போடும் மின்கடிதாசில் அன்புள்ள ஐயா, அன்புள்ள அம்மா என்று ஐயாவுக்கு அம்மாவும், அம்மாவுக்கும் ஐயாவும் மாற்றிப் போடுவது மகா பாபம். முதல் தரக் குற்றம். எப்படி அழைப்பது என்று தெரியவில்லையென்றால் ஐயா (பார்) அம்மா என்று பொதுவில் சலாமடித்துப் சல்யூட்டேஷன் போடவேண்டுமாம். அப்படியே ஆண்பால் பெண்பால் அறிந்து பெயர் தெரிந்தால் Mr. அல்லது Ms என்று தக்க மரியாதையோடு விளிக்கலாம்.
 
ஆறு மாதத்துக்கு மேல் நீங்கள் வீட்டிலேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த பின் யாரோ புண்ணியவான் உங்கள் விண்ணப்பத்தை தூசித் தட்டி எடுத்து உங்களை நேர்முகத்துக்கு கூப்பிட்டால் அது நீங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம். கல்லூரியிலிருந்து பாடம் மறக்காமல் சுடச்சுட வெளியே வந்தவராயினும், படித்தது மறந்து போன அனுபவஸ்தராக இருந்தாலும் ஆறு மாதத்திற்குள் ஓரிடத்தில் நீங்கள் அடிமையாக வேலைக்குச் சேர்ந்திருக்கவேண்டும். நாளாக நாளாக உங்களை கட்டம் கட்டி உதவாக்கரை பட்டம் கட்டி ஓரங்கட்டிவிடுவார்கள்.
 
உங்களுடைய விண்ணப்பத்தில் நீங்கள் போட்டிருக்கும் “இன்னார் இன்னார் எனக்கு தெரியும், இன்னார் இன்னாரோடு நான் இவ்வளவு வருடங்கள் குப்பைக் கொட்டியிருக்கிறேன்” போன்ற “இவரை எனக்கு தெரியும்” விவரங்கள் ரொம்ப முக்கியம். நீங்கள் கைக் காண்பிக்கும் அன்னாரை வைத்து உங்கள் வேலைவாய்ப்புத் தீர்மானிக்கப்படும்.
 
உங்கள் மனதுக்கு இஷ்ட கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தால், ஹெச்.ஆர் மக்களைத் தவிர்த்து வேறு ஆட்கள் மூலம் தொடர்புகொள்ளுதல் நல்ல அனுகூலமான பலன்களைத் தரும்.
 
நேர்முகச் சடங்கு ஆரம்பித்தது முதல் காலகாலமாகக் கேட்கப்படும் கேள்வியான “உங்கள் பலவீனம் எது?” என்ற சம்பிரதாயக் கேள்விக்கான பதில் ரொம்ப முக்கியம். ”எனக்கு பலவீனம் ஏது?” என்று சத்புத்ரனாக நெஞ்சு நிமிர்த்தி எதிர் கேள்வி கேட்டு சதிராடினாலும் பிரச்சனை, “வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆறு மணியிலிருந்து என்னை நீங்கள் எந்த டாஸ்மாக்கிலும் பார்க்கலாம். ஹி..ஹி..” என்று முகத்தை தொங்கப்போட்டு வழிந்துச் சிரித்தாலும் தீர்ந்தது. கொஞ்சம் நாசூக்காகப் புளுகத் தெரியவேண்டும். “சார்! நான் ஒரே வேலையை ஒரு வேளையில் தீர்க்கமாகச் செய்து முடிப்பேன். இருந்தாலும் பலவேலைகளை ஒரே வேளையில் செய்ய முயற்சிக்கவேண்டும். இது தான் என்னுடைய பலவீனம்.” இது தான் சாமர்த்தியமான பதில் என்கிறார்கள் கம்பெனிக்கு ஆளெடுக்கும் எக்ஸ்பர்ட்டுகள்.
 
ஃபன்னிரமேஷ்@ஜிமைல்.காம், ஃப்ரீக்கிமகேஷ்@ஹுஹு.காம் என்றெல்லாம் ஈமெயில் முகவரி வைத்துக்கொண்டால் உங்கள் விண்ணப்பங்களை தூக்கி ஓரத்தில் கடாசி விடுவோம். அந்த ஈமெயில் பெயரில் உங்கள் யோக்யதையை சுலபத்தில் கண்டுபிடித்துவிடுவோம்.
 
ஐம்பது அறுபது என்று பழுத்து ரிடையர் ஆகும் முதிர்ந்த வயதுகளில் நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது கல்லூரியில் இருந்து எந்த வருடத்தில் தேர்ச்சியடைந்தீர்கள் என்று குறிப்பிடாமல் இருப்பது ஷேமம். உங்கள் கதவைத் தட்டி யாராவது “இன்னிக்கி எங்க ஆபிசுக்கு இண்டெர்வியூக்கு வாங்க”னு கூப்பிடலாம். வாய்ப்பு உள்ளது.
 
ஒரு பக்கத்தில் இரத்தின சுருக்கமாக இருக்கவேண்டும் என்று உங்களின் ஆறு வருட வேலை வரலாற்றை சிற்றெறும்பு எழுத்துக்களில் நுணுக்கி எழுதி அனுப்படும் பயோ டேட்டாக்களை யாரும் பூதக்கண்ணாடி கொண்டு படிக்க முயற்சிக்க மாட்டார்கள். அரிசியில் திருக்குறள் படிப்பது வேற ப்ராடக்ட். உங்களுடைய சி.வி வேறே! இதுபோல பொடியெழுத்துக்களில் சமர்ப்பிக்கப்படும் ரெசியுமேக்கள் நேரே டஸ்ட் பின் அல்லது ட்ராஷ் ஃபோல்டர்தான் அவைகளுக்குக் கதி.
கீழிருந்து மேலாகவும் ரெசியுமேக்கள் படிக்கப்படும். இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருந்தால் ஈசியாக பார்க்கப்படும். படிக்கப்படும். கூப்பிடப்படும். இல்லையேல் ஒதுக்கப்படும்.
 
வக்கீல், டாக்டர் போல ஹெச்.ஆரிடமும் பொய் பேசக்கூடாது. ரொம்பவும் வாய்கிழிய பழைய வேலையைப் பற்றி ஜம்பம் அடித்தால் ஒரு ஃபோன் கால் போட்டு உங்கள் பூர்வீகத்தை அலசி ஆராய்ந்துவிடுவார்கள். ஜாக்கிரதை!
 
ரெசியுமேக்கள் அந்த வேலைக்கான கீவேர்டுகளை சுமந்திருப்பது நல்லது. நிறைய கம்பெனிகளில் கணினியில் டார்ச் அடித்து விண்ணப்பங்களை தேடுவதால், அந்த ஃபில்ட்டருக்குள் உங்கள் ரெசியுமே சிக்கும் வாய்ப்பு அதிகம். கண்ணில் அகப்பட்டதை அவர்கள் கூப்பிட்டால் தானே வேலைக்கான இண்டெர்வியூ.
 
வானவில்லைப் போல வண்ணமயமான பல கலர் அடித்த ரெசியுமேக்கள் உங்கள் வேலை வாய்ப்பினை ஒரு சதவிகிதம் கூட நிச்சயம் வண்ணமாக்காது. காடி காடியாகக் கலர் அடித்து அனுப்பப்படுவை கண்ணை அரித்து, கண்ணிலிருந்து இரத்தம் சிந்த வைத்துவிடும். இங்கே கலர் கர்ண கொடூரமாகக் கன்றாவியாக இருக்கிறது. தூக்கி ஓரமாக வைத்துவிடுவோம்.
 
முகத்தோடு முகம் பார்த்து பேசும் நேர்முகம்:-
 
போய் உட்கார்ந்த அடுத்த கணத்தில் எதிர்த்தார்போல் அமர்ந்து நேர்முகத்தேர்வு நடத்து அதிகாரியிடம் “உங்களுடைய தொழில் மற்றும் லாப நஷ்ட கணக்கு என்ன என்று சொல்ல முடியுமா” போன்ற அபத்தமான கேள்விகள் உங்களுடைய வேலைத்தேர்வை வெகுவாகப் பாதிக்கும். அதிகாரி மிகவும் கோபிஷ்டராக இருந்தால், உடனடி லாட்டரி போல அந்த அறையிலிருந்து அவர் ”வெளியே போ” என்பார். நீங்கள் உடனடி ரிட்டர்ன்.
 
எல்லாவிதமான கேள்வி-பதில்களிலும் நீங்கள் குன்றிலிட்ட விளக்குப் போல சிறந்து விளங்கினாலும், அவர்களுடைய கம்பெனியின் வேலைக் குடும்பத்தில் அன்றாடம் உழைத்துக்கொட்ட, பழக்கவழக்கத்திற்கு மற்றும் சகஜமாய்ப் புழங்குவதற்கு நீங்கள் ஒத்துவருவீர்களா என்பது மிக முக்கியம். அறிவு மட்டும் அந்த வேலையைக் கொடுக்காது ஆட்டிட்டுயூடும் வேண்டும் என்பது தான் இதனால் விளங்கும் சமூகநீதி.
 
மாமிசமலை போல குண்டாக இருந்தால் வேலை கிடைப்பது கஷ்டம். அபூர்வம். காலசைக்க ஐந்து நிமிடம் கையசைக்க பத்து நிமிடம் என்று ஸ்லோமோஷனில் ஆசுவாசமாய் செய்தீர்கள் என்றால் போச்சு! நீங்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கவேண்டும் என்பதில்லை, உடல்ரீதியாகக் கூட ஃபிட்டாக இருக்கவேண்டும் என்று வேலைக்கு அமர்த்துபவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
 
”நிச்சயம் வாரம் ஒரு நாள் நா திருப்பதி போவேன் சார்! கோவிந்தா! கோவிந்தா!! பௌர்ணமிக்கு பௌர்ணமி நா திருவண்ணாமலையில் இல்லைனா யாரும் கிரிவலம் போக மாட்டாங்க! ஹர.ஹர. மஹாதேவா!!” போன்று கண்ணத்தில் போட்டுக்கொள்ளும் பதில்களால் நீங்கள் இந்தச் சுற்றிலேயே சர்வ நிச்சயமாக வெளியேற்றப்படுவீர்கள்.
 
ஸைலன்ஸில் மொபைலை போட்டுவிட்டு குனிந்து குனிந்து கீழே பார்த்து தேடிக்கொண்டிருந்தால் எதிரில் கேள்வி கேட்பவருக்கு கொலை வெறி வரும். மொபைலை அணைத்துவிடுவது உசிதம். இல்லையேல் நேர்முகத்தை தலைமுழுகிவிடுவது உன்னதம்.
 
கைகுலுக்கும் தோரணை ரொம்ப முக்கியம். இரண்டடி தள்ளி நின்று கொண்டு தீட்டுப்பட்டவர்களை தீண்டுவது போல நாலு விரலை மட்டும் கொடுப்பது அல்லது எதிராளி கை மணிக்கட்டோடு எலும்பு முறியும் வரை பிடித்து குலுக்குவது என்று இரண்டுமே ஒவ்வா. கைகுலுக்கல் சாஸ்திரத்தில் கரைகண்டவர்கள் உங்கள் உளப்பாங்கை எளிதில் அறிந்துகொள்வார்கள்.
 
நேர்முக விசாரணையின் போது கேள்வி கேட்கும் மானேஜர் ஒரு அரை மணி அவருடைய கார், சுய ப்ரதாபங்கள், கம்பெனி பற்றி அளந்துகொண்டிருந்தார் என்றால் “நீங்கள் ஒரு உன்னத பரீட்சார்த்தி” என்றும் “கட்டாயம் தேர்வுசெய்யப்படவேண்டிய ஆள்” என்றும் நிச்சயமாய் இன்னும் சிறிதுநேரத்தில் ஒத்துக்கொள்வார். கியாரண்டியாய் செலக்ட்டட்.
 
உங்களுடைய டெக்னிகல் தேர்ச்சியை காட்டுவதற்கு லாப்டாப்பை வைத்துகொண்டு நேர்முகத்தேர்வு நடக்கும் அறையில் டெக்னோ அலப்பறையில் ஈடுபடவேண்டாம். நோ! கட்டாயம் நேர்முகம் பார்ப்போருக்குப் பிடிக்காது. உங்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள்.
 
உள்ளே நுழையும் போது கல்யாணத்திற்கு சந்தன பேலாவோடு சர்க்கரையும் சேர்த்துக் கொடுப்பது போல உட்கார்ந்திருக்கும் அழகான அட்மின் ஸ்டாஃபிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும். அவர்களிடம் ரொம்பவும் அமட்டலாகப் பேசினால் கூட ஹெச்.ஆருக்கு சேதி தெரிந்துவிடும். ஆபீசுக்குள் அங்குலம் அங்குலமாக உங்களை அளக்கிறார்கள். விழிப்பாயிருங்கள்!
 
”காலையிலர்ந்து மினுமினுன்னு எனக்கு ஒரே வயித்துவலி, என்னோட நாய்க்கு ரெண்டு நாளா கடும் ஜுரம், பேதி பிச்சுகிச்சு” என்றெல்லாம் கதை விடும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத இப்பதில்கள் இண்டெர்வியூவுக்குத் துளியும் வேண்டாதவை. ஆகாதவை. சகிக்கமுடியாதவை. அவசியம் தவிர்க்கவேண்டியவை.
 
”பழைய கம்பெனியில் நா நாலு பேர் மொகரையை பேர்த்துட்டேன். போன வாரம் அந்த மேனேஜரை விட்டுக் கிழிகிழின்னு கிழிச்சுட்டேன்” போன்று முண்டாத் தட்டி பதிலலிக்கும் பலசாலிகளின் ரெசியுமேக்கள் குப்பத்தொட்டியை நோக்கிச் சென்றடைகின்றன என்று எக்ஸ்பெர்ட்டுகள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
 
நேர்முகத் தேர்வாளரின் பெயரை உச்சரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதி முக்கியமான பாயிண்ட் இது. பட்நாகர் என்ற பெயரை படாநாகர் என்று அழைத்துவிட்டால் சோட்டாவாக உங்களை ஒரு ஏளனப்பார்வை பார்த்து விரட்டிவிடுவார்கள்.
 
”உங்களைப் பற்றி சொல்லுங்கள்” என்ற கேள்விக்கு நீங்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்தது, ஊர் சுற்றியது, சைட் அடித்து செருப்பால் அடிபட்டது, காலில் விழுந்து கல்யாணம் கட்டியது என்று ஒரு மணி நேரம் சுயசரிதை பேசினால் ரெண்டாவது கேள்வியே உங்களுக்கு கிடையாது. நேர்முகம் நிறைமுகமாகி விடும். அப்படியே பொடிநடையாய் நடந்து வீட்டுக்கு வந்துடவேண்டியதுதான்.
 
இண்டெர்வியூ முடிந்த கையோடு “உங்களுடைய அன்புக்கு நன்றி. நீங்கள் அருமையான பல கேள்விகள் என் ரெண்டாம் வகுப்பு உபாத்யாயர் போலக் கேட்டீர்கள்” என்று நன்றியறிவிப்புக் கடிதங்கள் உடனே போட்டுக் கழுத்தறுக்காதீர்கள். ஒரு வாரம் கழித்துப் போட்டு உங்களை நீங்கள் ”ஹலோ நாந்தான்” என்று ஞாபகப்படுத்தலாம். அதிர்ஷடம் இருந்தால் பதில் பெறலாம்.
 
டெய்லி இரண்டு கால் போட்டு, சார் என்னை நீங்கள் தேர்வு செய்தீர்களா? ரிசெல்ட் அனௌன்ஸ் பண்ணிட்டீங்களா? உங்கள் கம்பெனியில் சேர்வதர்க்கு தான் நான் இந்த ஜென்மம் எடுத்துள்ளேன் என்று அடிக்கடி கனம் கம்பெனியாரை ரத்தம் வரப் பிராண்டினால் உங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று துளியூண்டு நினைத்தாலும் அதை அழித்துவிட்டு கழற்றி விட்டுவிடுவார்கள்.
 
ஒரு கம்பெனியில் உங்களை தேர்வு செய்யவில்லையென்றால் ”ஏன் எதற்கு எப்படி “ என்று “எ” கேள்விகளில் அவர்களை கண்டமேனிக்கு எக்காதீர்கள். அடுத்தமுறை எதாவது ஓப்பனிங் வந்தால் நிச்சயம் “எவண்டா அது? ஏகத்துக்கும் கேள்வி கேட்டது” என்று உங்களை திரும்ப அழைக்கமாட்டார்கள்.
 
உங்கள் தொல்லை தாங்காமல் எங்களுக்குள்ளயே ஒரு ஆளை எடுத்துக்கிட்டோம் என்று உங்களிடம் சரடு விடுவோம். அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதுதான் இருவருக்கும் நல்லது.
 
பழைய கம்பெனியில் உங்களை மேய்த்தவருக்கு நீங்கள் ஆகாதவர் என்றால் கர்ம சிரத்தையாக அவருடைய தொடர்பு எண்ணை புது ஆட்களிடம் தராதீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் சேர்ந்த தேதி, கம்பெனியில் இருந்து கழன்ற தேதி முதலியவை மட்டும் தெரிந்த ஹெச்.ஆர் மகானுபாவர்களின் எண்ணைக் கொடுங்கள். பிழைத்துக்கொள்வீர்கள்.
 
சம்பள உயர்வு மற்றும் பேரம்
 
டாண்டான்னு பதில் சொல்லி உங்களைப் பிடித்துப் போய்விட்டால் அடுத்தது வருவது சம்பள பேரம். ”எங்க முதலாளி பத்தாயிரம் தான் இதுக்கு தரணும்னு சொல்லியிருக்கார்” என்று அடிமாட்டு விலைக்கு முதலில் உங்களை மடக்க முயற்சிப்பார்கள். படிந்தால் ”அடிமை சிக்கிட்டான்டா!!” என்று வெற்றிக்களிப்பில் மடக்கிப்போட்டு லாபம் பார்ப்பார்கள்.
 
நம்முடைய ”அன்றைய சந்தை மதிப்பு” என்று ஒன்றை கணக்குப் போட்டு பார்த்துவிட்டு கையில் துண்டு போட்டு பேரம் பேசாத குறையாக கேட்டாலும் நாலு பேரிடம் உங்களைப் பற்றி துருவித்துருவி விசாரித்து வைத்திருக்கும் தகவலை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவர்கள் முடிவு செய்த சம்பளத்தைதான் படியளப்பார்கள். உடம்பு பூரா சதும்ப எண்ணையை தேய்த்துக்கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்னு சொல்லுவாங்க.
 
நேர்முகத்தை முடித்துக்கொண்டு போன கையோடு வீட்டுக்குச் சென்று “மம்மி..மம்மி.. அவங்க கொடுப்பேன்னு சொன்ன சாலரி ரொம்ப குறைச்சல்”னு குறைசொல்லி அவங்களை விட்டு அதிகாரிங்க கிட்ட ஃபோன்ல காசு கூடத் தான்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு அந்த வேலையிலிருந்து டண்டனக்கா..டனக்குனக்கா..தான்
 
கல்தா கொடுத்தல்:-
 
கீழே வரும் இரண்டும் தொழில் நுணுக்கம் தெரியாத ஹெச்.ஆர் ஆட்களுக்கு பழம் தின்று கொட்டைப் போட்ட மனிதவள அதிகாரி சொல்லித்தரும் டிப்ஸ்!
 
ஒரு ஆளை வேண்டாம் என்று கறை வச்சுட்டாங்கன்னா, அந்த வானத்தை நிலா வரதுக்குள்ள கயிராத் திரின்னும், உடனடியா இந்த மலையைக் கடுகாக்குன்னும் கேட்டு குடைந்துவிடுவார்கள். வேலையைச் சரிவர முடிக்கவில்லை, தெரியவில்லை என்று கேஸ் பில்டப் செய்து கடைசியில் ஒரு நாள் நோட்டீஸ் கொடுத்து டாட்டா பைபை காட்டிவிடுவார்கள்.
 
கம்பெனியின் வேலைக்காரர்கள் பட்டியலில் உச்சாணியில் இருந்தீர்கள் என்றால் அது கூரான கம்பி மேல் நடப்பதற்கு சமானம். உங்களுடைய அன்றாட வேலைகளையும் துறை சார்ந்த வேலைகளையும் சிரித்துக்கொண்டே பிடிங்கிவிட்டு “ஸ்பெஷல் அசைன்மெண்ட்” என்று புதிதாக வேறொன்று கையில் கொடுத்தார்கள் என்றால், “வெளியே போ” என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாமல் மென்மையாக “ப்ளீஸ். கெளம்பிடு ராஜா”னு வாயால் சொல்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களிடம் வாயாடாம உங்களோட ரெசியுமேவை அப்டேட் பண்றது உத்தமமான காரியம். அன்னிக்கி சாயரட்சை அட்லீஸ்ட் நாலுபேருக்கு உங்களுடைய ரெசியுமேவை அனுப்பியிருந்தீர்கள் என்றால் நீங்கள் சமர்த்தர்.
 
எங்கேயும் எப்போதும் சந்தேகம்:-
 
“As I am suffering from fever” னு லீவு போட்டுட்டு ஃபேஸ்புக்ல “மச்சி! நா மங்காத்தா பார்த்துக்கிட்ருக்கேன்”னு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றவங்களுக்கு சீக்கிரம் ஆபிஸ்ல கெட்டிமேளம்னு சொல்லத் தேவையில்லை. இதெல்லாம் நுனிக் கிளையில உட்கார்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டும் அதிபுத்திசாலிகள்.
 
நேற்று சேர்ந்த கம்பெனியில் காப்பி டீ கவுண்டர் முன்னாடியே ஒற்றைக்காலில் முகாமிட்டு தவமிருக்காமல் கொஞ்சம் உங்கள் சீட்டில் உட்கார்ந்திருக்கவும் பழகிக்கொள்ளுங்கள். அடிக்கடி சீட்டில் ஆள் கிடைக்கவில்லை என்றால் உங்களது சீனியருக்கு உங்கள் வேலை மேலும் வேலை கெட்ட வேளை மேலும் சந்தேகம் வரும்.
 
உங்களுக்கு வரும் ஃபார்வேர்ட் மெயில்களின் லட்சணம் மற்றும் நீங்கள் வலையில் வலை வீசித் தேடிப் பார்க்கும் சைட்டுகள் போன்றவற்றை வைத்து உங்களை எடைப்போட்டு விடுவார்கள். கம்பெனி இரகசியங்களை எதுவும் வெளிஆட்களுக்கு அனுப்பி “மச்சி பார்த்தியா” என்று பெருமை பீத்திக் கொண்டீர்கள் என்றால் தொலைந்தீர்கள். அப்புறம் நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். ஹெச்.ஆர் உங்கள் மீது ஒரு கண் வைத்துவிட்டால் நிச்சயம் உங்கள் சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் கை வைத்துவிடுவார்கள். ஜாக்கிரதை!!
 
-RVS 

Add comment


Security code
Refresh