MYPNOSat03242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரம்

  • PDF
'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' என்பது எல்லாம் இன்று வாசகங்களாகவே இருக்கின்றன. மரம் வளர்ப்பிற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
 
தமிழக வனத்துறை சார்பில் பல லட்சங்கள் செலவழித்து மரம் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடக்க விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வி.ஐ.பிக்களும், அதிகாரிகளும் அதன்பிறகு அந்த மரங்களை கண்டுக்கொள்வதில்லை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அவைகள் பட்டுபோய்விடுகின்றன. அடுத்து, சாலை விரிவாக்கம், நகர வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுந்தோறும் குறைந்து வருகின்றன.

டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் பூங்கா, அரசு அலுவலகங்கள், சில சாலைகளில் மட்டுமே மரங்களைப் பார்க்க முடிகிறது. குறுகிய இடத்தில் பலமாடி கட்டி வாடகைக்கு விடப்படும் வீடுகளில் மருந்துக்கு கூட மரங்கள் இருப்பதில்லை. கிராமங்களில் கூட வறட்சிக் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. வரலாற்று புத்தகத்தைப் புரட்டினால் சாலையோரங்களில் அரசர்கள் மரங்களை வளர்த்தனர் என்பது குறிப்பிட்டு இருக்கும். இன்று அந்த மரங்களை நாம் வெட்டி வருகிறோம். இதே நிலை நீடித்தால் கையிலிருக்கும் லேப்-டாப்பில் தான் மரங்கள் குறித்த விவரங்களையும், அதன் புகைப்படங்களையும் வருங்கால சந்ததியினர் காண வேண்டியதிருக்கும்.

மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெரியளவில் சென்றடையவில்லை. காடுகள் அழிக்கப்படுகின்றன. பிளாட்களுக்காக விளைநிலங்கள் வீடுகளாக்கப்படுகின்றன. இதன் காரணமாக வறட்சியின் பிடியில் சிக்கும் நிலையில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. இருப்பினும் மரங்களை வளர்ப்பில் அக்கறை செலுத்தும் ஆர்வலர்கள் கொஞ்சம் இருப்பதினால் ஆங்காங்கே இன்னமும் மரங்கள் இருக்கின்றன.

சென்னையில் கடந்த 34 ஆண்டுகளாக மரங்களை வளர்ப்பதில் அக்கறை செலுத்தி வரும் முல்லைவனம் கூறுகையில், "என்னுடைய 13ம் வயதிலிருந்து மரம் வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகிறேன். இதற்காக 'ட்ரி பேங்க்' என்ற அமைப்பை நிறுவி, மர வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். மரம், செடி ஆகியவற்றின் நன்மைகள் குறித்து தமிழகம் முழுவதும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளில் எங்கள் அமைப்பு சார்பில் இலவசமாக மரங்கள், செடிகள் விநியோகிக்கப்படுகின்றன. மரங்களை வளர்க்க முடியவில்லை என்று யார் கூறினாலும் அங்கு சென்று அவற்றை வாங்கி வந்து வேறுஇடங்களில் அதை வளர்க்கிறோம். அதைப் போன்று மரம், செடிகளை வளர்க்க விரும்புபவர்களுக்கும் இலவசமாக மரக்கன்று, செடிகளை கொடுத்து வருகிறோம்.

மரக்கன்றுகளை நாங்களே தயார் செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியிலிருந்து ஜூன் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் விதைகள் சேகரிப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்ட இந்த முகாமில் விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5 வகையான மரங்களின் 30 கிலோ விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் மரக்கன்று உறுப்பினர்கள், போரூர் ஆல்பா கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இந்த விதை சேகரிப்பு முகாமில் 780 கிலோ விதைகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விதைகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். சேகரிக்கப்படும் விதைகளை முளைக்க வைத்து மரங்களை வளர்க்கிறோம்.

இதைத்தவிர வேறு இடங்களிலிருந்தும் மரக்கன்றுகள் வாங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மரங்களை நட்டோம். இதில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மரங்கள் நல்ல நிலையில் உள்ளன. இதே போன்று 2013ம் ஆண்டு நட்ட மரங்களில் ஒரு லட்சம் மரங்கள் நன்றாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். இதுவரை 93 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். இந்தியாவில் மக்கள் தொகை 127 கோடி என்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரம் இருக்க வேண்டும். இந்த வகையில் 140 கோடி மரங்களை என்னுடைய ஆயுட்நாட்களுக்குள் நட வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். அதுவே என்னுடைய மூச்சு, முயற்சி. இது எங்களுடைய இலக்கு. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.

அழிந்து வரும் மரங்கள்: முன்பெல்லாம் சாலையோரங்களில் ஆலமரமும், அரச மரமும், புளிய மரமும் அதிகமாக காணப்படும். கிராமங்களிலும் இந்த மரங்களை அதிகளவில் பார்க்கலாம். இதில் ஆலமரத்துக்கும், அரச மரத்துக்கும் இடம் அதிகம் தேவை. இதைக்கருத்தில் கொண்டு ஆல, அரச மரங்களை வளர்க்க யாரும் முன்வருவதில்லை. இதனால் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன.

முல்லைவனம் போன்ற ஆர்வலர்களால் தான் இன்னும் மரங்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது!

-எஸ்.மகேஷ்

ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015 10:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh