MYPNOSat03242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

விண்வெளிக்குப் போகாமலேயே, விண்வெளிக்குப் போவது எப்படி?

  • PDF
'50 வருடங்கள் ஆகலாம்... ஏன், 500 வருடங்கள் கூட ஆகலாம். ஆனால், நம் சந்ததியினர் விண்வெளியில் வாழ்வது சாத்தியமே!' தீர்க்கமான பார்வையுடன் தீர்க்கதரிசி போல் பேசுகிறார் ஏஞ்சலோ வெர்முலன்(Angelo Vermulen). நாஸா அமைத்திருக்கும் செவ்வாய் கிரக சூழலியலுக்கான சிமுலேஷன் டீம் கமாண்டர் இவர்தான். சரி, விண்வெளியில் வாழப்போகிறோம். சிமென்ட் வீடா? மரத்தினாலான வீடா? ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? சுற்றிலும் வண்ணங்கள் கூட இல்லாமல் ஒரு மனிதனால் அங்கே தாக்குப்பிடிக்க முடியுமா?

ஏஞ்சலோ வெர்முலன் டீமுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் இதுதான். ஒருநாள் விண்வெளியில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும்போது அங்கிருக்கும் சுற்றுச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வசிப்பிடத்தை உருவாக்கவேண்டும். ஸ்கூல் படிக்கும்போது நமக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை அக்காவுக்கோ, பக்கத்து வீட்டு தம்பிக்கோ கொடுத்து எழுதி வாங்குவதுபோல ஏஞ்சலோ வெர்முலன்-ம் உலக மக்களுக்கு இந்த அசைன்மென்ட்டை ஒரு ஆர்ட் ப்ராஜெக்ட் சேலஞ்சாக கொடுத்துவிட்டார்.

இனி, ஏஞ்சலோ வெர்முலன்-ன் வார்த்தைகளில்....!

"ஒரு விஞ்ஞானியாக நாசா அமைப்பின் செவ்வாய் கிரக சிமுலேஷன் டீமின் கமாண்டராக இருந்தேன். ஒரு கலைஞராக பல சமுதாயங்களுடன் இணைந்து உலகம் முழுக்க கலைப் பொருட்களை உருவாக்கி வருகிறேன். முதலில் நாஸா எனக்கு கொடுத்த மிஷனைப் பற்றிப் பார்ப்போம்!
 
HI-SEAS (Hawaii Space Exploration Analog and Simulation) என்ற பெயரில் நாஸா ஒரு ப்ராஜெக்ட்டை ஆரம்பித்தது. ஹவாய் தீவில், செவ்வாய் கிரகம் போன்ற நிலப்பரப்பு கொண்ட இடங்கள் உள்ளன. அங்கே 6 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவை உருவாக்கி, ஒரு 'Dome'-ல் வைத்து மாதக்கணக்கில் அடைத்துவிடுவார்கள். வெளிஉலகோடு கொஞ்சம் கூட தொடர்பே இருக்காது. இங்கே 6 பேருடன், 4 மாதம் தங்கி இருந்தேன். செவ்வாய் கிரகத்தில் மாதக்கணக்கில் தங்கி இருந்தால் என்னனென்ன சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை பூமியிலேயே சிமுலேட் செய்து பார்த்தோம். முக்கியமாக உணவு குறித்த ஆராய்ச்சிகளை செய்தோம். மேலும், விண்வெளி உடைகளை அணிந்துகொண்டு வெளியே நடந்து பார்ப்போம். எல்லாம் நம் ஊர்தான். ஆனால், செவ்வாய் கிரகத்தில் இருப்பதுபோன்ற உணர்வு இருக்கும்.

இதில் சேலஞ்சே சிறிய இடத்துக்குள் குழுவாக பல நாட்களுக்கு இருப்பதுதான். இதனால் உளவியல் ரீதியாக பல பாதிப்புகள் இருக்கும். இதையெல்லாம் ஆராய்ந்து, மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தால் மனநல ரீதியாக எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று கண்டுபிடிக்கவேண்டும். இந்த சூழ்நிலையில்தான் 'Seeker' எனும் போட்டியை உருவாக்கினேன். வேறு ஒரு கிரகத்தில் இருந்தால் நம் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணித்து, அதற்கேற்ற வசிப்பிடத்தை உருவாக்கவேண்டும். இதுதான் டார்கெட்.

இந்தப் போட்டியின்படி நான் ஒரு ஐடியாவை ஒரு குழுவினரிடம் கொடுப்பேன். அவர்கள் குழுவாக ஒன்றிணைந்து அந்த ஐடியாவை ப்ரோட்டோடைப்பாக மாற்றுவார்கள். இந்த ப்ரோட்டோடைப்பே நாம் உள்ளே புழங்கும் அளவுக்கு பெரிதாக இருக்கும். பெல்ஜியம் மற்றும் ஹாலந்தில் முதல் ப்ரோட்டோடைப்கள் தயாராகின. ஸ்லோவேனியாவில் இருந்த ஒரு குழு, முதலில் தயாரான ப்ரோட்டோடைப்பின் மேலோட்டமான கட்டமைப்பை எடுத்துவிட்டு, biomorphic ஸ்டைல் கட்டமைப்பை உருவாக்கினார்கள். பயன்படுத்தப்பட்ட கேரவன்களை வாங்கி இந்த ப்ரோட்டோடைப்பை தயார் செய்தனர்.

இந்த ப்ரோட்டோடைப் வசிப்பிடத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. சூழலியல், மனிதர்கள், தொழில்நுட்பம். அக்குவாகல்ச்சர் முறையில் மனிதர்கள் தங்களுடைய உணவுகளைச் சார்ந்த வசிப்பிடத்தில்தான் இருப்பார்கள். இங்கே எங்களை நாங்களே அடைத்துக் கொண்டு பல நாட்கள் தங்கியிருப்போம்.

இப்போது சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் இந்தப் ப்ராஜெக்ட்டின் அடுத்தக் கட்டப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. இந்த இடத்தில் நிலப்பரப்பு செவ்வாய் கிரகம் போலவே இருக்கும் என்பதால் நாஸாவின் ஃபேவரைட் இடம் இது. மேலும், உலகிலேயே மிகவும் வறட்சியான பகுதியும் இதுதான். இங்கே நாள்கணக்கில் தங்கி, செவ்வாய் கிரகத்தின் நாம் வாழப்போகும் சூழலை ஆராய்ச்சி செய்யப்போகிறோம்.

விண்வெளி, செவ்வாய் கிரகத்தில் மனிதன் என்றாலே ராக்கெட், ஏலியன், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. பலவிதமான சமூகங்களில் இருந்து ஒன்றாக இணையும் மனிதர்கள் ஒரே இடத்தில், ஒரேவிதமான உணவுப்பழக்கத்தில், வெளியே எந்தவித தொடர்பும் இல்லாமல், வேறு ஒரு கிரகத்தில் எப்படி வாழப்போகிறார்கள்?

இதைத் தெரிந்துகொள்ளத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். விரைவில், விடைகூறுவோம்!"

நம்பிக்கையுடன் முடிக்கிறார் ஏஞ்சலோ வெர்முலன்.

- ராஜா ராமமூர்த்தி

Add comment


Security code
Refresh