MYPNOSat03242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வாட்ஸ்அப் வக்கிரங்கள்!

  • PDF

Whats appன்றைய நாளின்... ஏன் இந்த நிமிடத்தின் பரபரப்பைத் தீர்மானிக்கும் அதிரடி ஊடகமாக உருவெடுத்திருக்கிறது வாட்ஸ்அப்! புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ... என ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று அதில் வைரலாகப் பரவுகிறது. பல நடிகைகளின் அந்தரங்க செல்ஃபிகள் ஆரம்பத்தில் அணிவகுக்க, இப்போது சாமானியர்களின் அந்தரங்கம்.

அதில் பரபரப்பாகப் பரப்பப்படுகிறது. சென்னை காவல்துறை உதவி ஆணையருக்கும் பெண் காவலருக்கும் இடையிலான உரையாடல் கடந்த மாத வைரல் என்றால், 'ஆசிரியை - மாணவன் காதல்இரண்டு வாரங்களுக்கு முந்தைய வைரல். 'கிளாட்வின் - எழிலரசன் ஆடியோகடந்த வாரம். இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் சமயம், ஒரு பேராசிரியரின் வீடியோ. இவற்றில் பெரும்பாலானவை பாலியல் தொடர்பானவையாக இருக்கின்றன. அவற்றை ரகசியமாகப் பார்த்துவிட்டு யாரும் அழித்துவிடுவது இல்லை. 'அய்யய்யோ... யாரோ ஒருவரின் பெர்சனல் ஆயிற்றே இது!எனப் பதறும் மனச்சங்கடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நம்மவர்கள் இழந்துவருகிறார்கள். தனக்கு வந்ததை இந்த உலகத்துக்குச் சொல்லியே ஆக வேண்டும் என்ற தீராத துடிப்புடன் முடிந்தவரை அதிகம் பேருக்கு ஷேர் செய்துவிட்டுத்தான் ஓய்கிறார்கள். மொத்த சமூகமும் இந்த நோய்க்கூறு மனநிலையில்தான் திரிகிறது. 'இன்னைக்கு என்ன வாட்ஸ்அப் ட்ரெண்டிங்?’ என ஒருவருக்கு ஒருவர் குறுஞ்சிரிப்புடன் விசாரித்துக்கொள்வதைப் பார்த்தால், கலக்கமாக இருக்கிறது.

''இணையத்தின் வழியாக உருவாகும் வெர்ச்சுவல் களமானது, மனிதமனத்தின் இயல்புத்தன்மையோடு சடுகுடு ஆடத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தச் சமூகம் பார்த்திராத விசித்திரமான மனிதர்களையும் அந்த மனிதர்களின் வக்கிரங்களையும் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இங்கு யாருக்கும் எந்தவிதமான மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தைக்கூட மதிக்கத் தேவை இல்லை. நாம் பகிரும் வீடியோ/ஆடியோ/புகைப்படத்தால் இன்னொரு குடும்பம் எப்படிப்பட்ட மன அழுத்தங்களுக்கு ஆளாகும் என யோசிப்பதே இல்லை. நம் தேவையெல்லாம் அந்தச் சொற்ப நேர அற்பச் சந்தோஷம் மட்டுமே'' என்கிறார் இணையத்தில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் வா.மணிகண்டன்.

ஆனால், இந்த அற்பத்தின் பாதிப்புகள் மிக, மிக அதிகம். எந்த வக்கிரமும், இறுதியில் ஒரு பெண்ணின் இருப்பைச் சிதைப்பதைப்போலவே, இவற்றின் இறுதி பாதிப்பைச் சுமப்பவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் பரவும், தனிப்பட்ட ஓர் அந்தரங்க வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பெண் அடையும் மன அழுத்தத்தை யாராலும் அளவிட முடியாது. அவரது அப்பாவுக்கும் அண்ணனுக்குமே அந்த வீடியோ பகிரப்படலாம்; அவரது திருமண வாழ்வைச் சிதைக்கலாம்; மணமுடித்த பெண்களுக்கு எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல் உண்டாக்கலாம். அது, அந்தப் பெண்ணை வாழ்நாள் எல்லாம் துரத்தப்போகும் பூதம்; காலை எடுத்தால் வெடித்துவிடுவதற்காகக் காத்திருக்கும் கண்ணிவெடி. அந்தரங்கத்தைப் படம்பிடித்துக்கொண்ட அறியாமையும் தவறும் அவருடையதாக இருந்தாலும், மற்றவர்களின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்தவும் பகிரவும் நமக்கு என்ன இருக்கிறது உரிமை? வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோவை அனுப்பியது யார், யார்-யார் வழியாக கைமாறி இது வந்திருக்கிறது என்ற விவரத்தை வெளிப்படையாக அனைவரும் பார்க்க முடியும் என்ற நிலை வந்தால் மட்டுமே, இந்த அபாயக் கலாசாரத்தை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும்!

'ஒரு பெண்ணைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகள், அவரது வாழ்க்கையை அழித்து, குடும்பத்தையே தற்கொலைக்குத் தள்ளும் அளவுக்கு வன்முறையானவை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கும் பகிர்வதற்கும் என்றே ஆயிரக்கணக்கான வலைதளங்கள் இயங்குகின்றன. தமிழிலும் உள்ளன. லட்சக்கணக்கானவர்கள் இவற்றைப் பார்ப்பதால், விளம்பரம் மூலமும் வேறு வழிகளிலும் அவர்களுக்கு வருவாய் வருகிறது. கிசுகிசுக்களையும் அவதூறுகளையும் பரப்புவது கொழுத்த லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது'' என்கிறார் இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தில் இயங்கிவரும் இலங்கையைச் சேர்ந்த மயூரன்.

மேலும், ''தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால், ஆபாச, அவதூறு செய்திகளை உள்ளடக்கிய லிங்க்குகள்தான், ஹேக்கர்களின் தூண்டில்களாக இருக்கின்றன. லிங்க்கில் இருக்கும் தலைப்பு அல்லது புகைப்படத்தைக் கண்டு மயங்கி, நீங்கள் அதைச் சொடுக்கிய உடனேயே உங்கள் கணினியில் வைரஸைப் பரவச் செய்யலாம். உங்களை ஏமாற்றி, உங்களின் அந்தரங்கத் தகவல்களைப் பெற முடியும்; உங்களை இணையம் வழியாக உளவு பார்க்க முடியும். தகவல்களின் சுவாரஸ்யத்தில் நீங்கள் ஏமாற்றப்படுவது உங்களுக்கே தெரியாமல் போய்விடும்'' எனவும் எச்சரிக்கிறார்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பற்றிய விவரம், நேபாளம் பூகம்பம் குறித்த வீடியோ, ரத்தம் தேவை என்ற அறிவிப்பு... என வாட்ஸ்அப்பில் பயன்தரக்கூடிய எத்தனையோ தகவல்களும் வரத்தான் செய்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த அளவுடன் ஒப்பிடும்போது அவை சொற்பம். ஆபாசமும் அசிங்கமுமே அதிகம் பகிரப்படுகின்றன. செல்போனில் அதிவேக இணையம் சாத்தியமான பிறகு, இதற்காக கம்ப்யூட்டரைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம்கூட இல்லாமல் போய்விட்டது. அலுவலகம், வீடு, டீக்கடை, பேருந்து, ரயில், கழிப்பறை, கோயில், நடுத்தெரு... என எங்கிருந்தும் இந்த வீடியோ, புகைப்படங்களைப் பார்க்கவும் அனுப்பவும் முடியும். இதனால் சாலைகளில், செல்போன் திரையில் முகத்தைப் புதைத்துக்கொண்டே நடக்கிறார்கள். காதில் இருக்கும் இயர்போனில் என்ன ஆடியோ ஒலிக்கிறது என்பது நமக்குக் கேட்பது இல்லை. ஆனால், அவர்களின் முகங்களில் நவரசம் மிளிர்கின்றன.

அதே நேரம் இந்த நவீன சமூக ஊடகங்களின் வரவையும் வளர்ச்சியையும் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. இவற்றுக்கு நேர்மறையான பங்களிப்பும் இருக்கத்தான் செய்கிறது.

'' 'சிட்டிசன் ஜர்னலிசம்என்பது நீண்ட காலமாக உலகளாவிய அளவில் இருந்துவரும் ஒரு போக்கு. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இந்தவிதமான இதழியல், பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது. 'அரேபிய வசந்தம்என்றழைக்கப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட பெரும் கிளர்ச்சிகளுக்கு இந்த சிட்டிசன் ஜர்னலிசமே வித்திட்டது. மக்களே செய்திகளைத் திரட்டுதல், அவற்றைப் பரப்புதல், அதன் மூலமாக ஒரு குடிமைச் சமூகத்தின் கண்காணிப்பை நிறுவனங்களின் மீதும் அரசின் மீதும் உருவாக்குதல் எனப் பல செயல்பாடுகள் உலகம் முழுக்க நடந்துவருகின்றன. இது, ஜனநாயகத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் பயன்படக்கூடிய ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும், இன்று சுயநலம் சார்ந்த பல்வேறு காரணங்களுக்காக செய்தி ஊடகங்கள் மறைக்கிற அல்லது அழிக்கிற பல செய்திகளை இந்த சிட்டிசன் ஜர்னலிசம் மூலம் வெளிக்கொணர முடியும்'' என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

இதே கருத்தை மயூரனும் வலியுறுத்துகிறார். ''ஒரு கிசுகிசுத் தகவலுக்கு, அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பண்பும் எதிர்ப்பு அரசியல் பண்பும் உண்டு. இலங்கையில் மகிந்த ராஜபக்ஷே குடும்ப ஆட்சி நிலவியபோது, ஊடகங்கள் மிக மோசமாக அச்சுறுத்தி ஒடுக்கப்பட்டன. எல்லா இடங்களிலும் தணிக்கை இருந்தது. அந்தச் சமயத்தில் மகிந்த ராஜபக்ஷே குடும்பத்தின் ஊழல்களும் அரசப் படைகளின் குற்றங்களும் அரசாங்கத் துக்கு எதிரான மேலும் பல தகவல்களும் கிசுகிசு வடிவத்திலும் வதந்தி வடிவத்திலுமே பரவின. பல சிங்கள கிசுகிசு இணையதளங்களே இதைப் பரப்பின. அவை வழக்கமான... கீழ்த்தரமான பாலியல் கிசுகிசுக்களுடன், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கிசுகிசுக்களையும் வெளியிட்டன. கடுமையான இனவெறியும் மகிந்த ராஜபக்ஷே மீதான தலைவர் வழிபாடும் உச்சத்தில் இருந்த வேளையில், இவ்வாறான தகவல்களை சிங்கள மக்கள் ஆர்வமாகப் படித்ததும் பகிர்ந்ததும் கவனிக்கப்படவேண்டிய நிகழ்வு'' என்கிறார் மயூரன்.

ஆனால், இதே தொழில்நுட்பம் சமூக விரோதிகளின் கையில் செல்லும்போது அது பெரும் சீரழிவை உருவாக்குகிறது.

''வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் உண்மைதானா என்பதை நாம் எப்போதும் சந்தேகிக்க வேண்டும். ஏனென்றால், பொய்களை உருவாக்கிப் பரப்புவதற்கு எளிதான ஊடகம் அது. மேலும், இதுபோன்ற செய்திகளை உருவாக்கி துர்நோக்கத்துடன் பரப்புகிறவர்கள் மேல் கடுமையான தண்டனைகளை அளிக்கக்கூடிய தெளிவான சட்டங்கள் தேவை. தமிழ்ச் சமூகத்தில் எது புதிதாக உள்ளே வந்தாலும், அது ஏன் ஒரு மனநோய்க்கூறுடன் வருகிறது என எனக்குப் புரியவே இல்லை'' என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

ஆபாசத்துக்கு அப்பால், நவீன சமூக ஊடகங்களும் இணையமும் மனித மனங்களில் ஏற்படுத்தும் உளவியல் தாக்கத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இவை மேம்போக்கு மனநிலையை வளர்த்தெடுத்து, எதையும் ஆழமாகக் கற்றறியும் மனப்பாங்கை மனித மனங்களில் இருந்து அகற்றுகின்றன. பத்து வரிகள் எழுதினால் படிக்க ஆள் இல்லை. ரெண்டு வரி, ஏழெட்டு வார்த்தை... அவ்வளவுதான். சுருங்கச் சொல்லப் பழக்கப்படும் மனம், அதற்கு ஏற்றவாரே சிந்திக்கிறது. 'நாலு வரிகள் போதும்என்றால், நாலு வரிகளுக்குத் தேவையான அளவுக்குச் சிந்தித்தால் போதும்; நாலு வரிகளுக்குப் படித்தால் போதும் என, இது பரிணாம வளர்ச்சியடையும்.

சிந்தனைப் பரப்பு, இப்படிச் சுருங்குவது ஆபத்தானது. பொட்டலம் எத்தனை பெரிதாக இருந்தாலும் உள்ளே காலியாக இருந்தால் என்ன பயன்? அதனால்தான் இன்றைய இளைஞர்களால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தீர்க்கமான ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. 'இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால், ஊழலை ஒழித்துவிடலாம்என, ஃபார்வர்டு மெசேஜ் ஒன்று வந்தால், அதை இன்னும் நான்கு குரூப்புக்கு ஃபார்வர்டு செய்கிறார்களே தவிர, அதன் அபத்தத்தைச் சிந்திக்க மறுக்கின்றனர்.

அதுபோலவே இவர்கள் எதற்காகவும் காத்திருப்பதும் இல்லை. எல்லாம் உடனடியாக வேண்டும். செயலின் விளைவுகள் இப்போதே தெரிய வேண்டும். அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஸுக்கு அடுத்த நொடியே ரிப்ளை வரவேண்டும். 'டபுள் டிக் வந்திருச்சுல்ல... அப்புறம் ஏன் உடனே ரிப்ளை பண்ணலை?’ என வாட்ஸ்அப்பில் பாய்கிறார்கள். அப்லோடு செய்த புகைப்படத்துக்கு உடனடி லைக் வேண்டும். உடனடி காதல், உடனடி புரமோஷன் என இது வாழ்வின் செயல்களில் எதிரொலிக்கிறது. இது,சோம்பேறித்தனத்தை வளர்த்தெடுக்கிறது. ஃபேஸ்புக்கில் கமென்ட் எழுதுவது என்றால், அது இரண்டு வரிகளே ஆயினும், அதற்காக யோசிக்க வேண்டும்; எழுத வேண்டும். ஆனால், லைக், ஷேர் செய்வதற்கு ஒன்றும் தேவை இல்லை. ஒரு டச்... ஒரு ஸ்வைப்... முடிந்தது. இத்தகைய எளிய, சுருக்கப்பட்ட வடிவம் நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிரம்பியிருக்கிறது.

 

ஆனால், தனக்கு விருப்பமானதைத் தேடிச் செல்லும் ஆர்வமும், அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் உழைப்பும்தான் ஒரு மனிதனுக்கு அனுபவங்களைத் தரக்கூடியவை. அவைதான் மனித அறிவைச் செறிவூட்டுகின்றன. ஒரு தனி மனிதனை, சமூகத்துடன் இணைக்கும் புள்ளியும் அதுதான். அத்தகைய தேடல் இல்லாமல் இருப்பது இளைஞர்களின் விருப்பமா, அவர்களைச் சூழ்ந்திருக்கும் தொழில்நுட்ப மாய உலகத்தில் அவர்களுக்கு வேறு தேர்வுகள் இல்லையா என்றால், இரண்டும்தான்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக மனித இனம் சேமித்துவைத்திருக்கும் அறிவு, கருவிகளின் வடிவில் புற உலகில் உலவுகிறது. அது ஒவ்வொன்றும் மனித வாழ்வை முன் எப்போதும் இல்லாத வகையில் இலகுவாக்கியிருக்கிறது. இந்தக் கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அதன் சுலபத்தன்மை நம் எண்ணங்களுக்குள் இடம் மாறுகிறது. எல்லாமே சுலபமாக நடக்க வேண்டும் என நினைக்கிறோம். வரிசையில் நின்று, காத்திருந்து... ம்ஹூம், அதெல்லாம் முடியாது. குரோர்பதி நிகழ்ச்சியில் 'அந்த 20-வது கேள்வியை முதல்ல கேளு. சீக்கிரம் கிளம்பணும்என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். இப்படி நவீனத் தொழில்நுட்பம் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தும் மாற்றங்கள்  அதிரவைக்கின்றன.  

''இந்த அவசர உலகத்தில், திண்ணைகளில் அமர்ந்து பேசும் கிசுகிசுக்கள் இல்லை; கல்யாண வீடுகளில் ஆற அமர ஊர்க்கதைகளைப் பேசும் நிலைமை இல்லை; டீக்கடைகளிலும் சலூன்களிலும் நாட்டுநடப்புகளைப் பேசுவது இல்லை. குடும்பத்திலேயேகூட சக மனிதரிடம் மனம்விட்டுப் பேசி எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும்? பேருந்திலும் ரயிலிலும் சக பயணிகளிடம் பேசுகிறோமா? இறுகிப்போய் கிடக்கிறோம். எந்த நேரமும் எல்லாவற்றிலும் அவசரம். ஓடிக்கொண்டே இருக்கிறோம். இடைப்பட்ட நேரங்களில் கணினித் திரையும் மொபைல் திரையும் தோள்கொடுக்கின்றன. எங்கேயோ இருக்கும் முகம் தெரியாத ஒரு மனிதனின் வழியாக நமக்கு அடுத்தவனின் கிசுகிசுக்களும் அந்தரங்கங்களும் வந்து சேர்கின்றன. அதை முகம் தெரியாத இன்னொரு மனிதனுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து ஆனந்தம் அடைகிறோம். இது ஒருவிதமான வடிகால்.

நம்மாழ்வார் சொல்வார், 'டிராக்டர்களைப் பார்த்தால் உழுவதுபோலத்தான் தெரியும். ஆனால், அவை உழுவது இல்லை; மேல்மட்ட மண்ணை மட்டும் கிளறிவிடுகின்றன. ஆனால், டிராக்டரின் எடையைத் தாங்க முடியாமல் அடியில் இருக்கும் மண் மேலும் மேலும் கெட்டிப்பட்டுப்போகிறதுஎன்று. அப்படித்தான் சமூக ஊடகங்களும். இப்போதைக்கு வேண்டுமானால் சக மனிதர்களிடம் கிடைக்காத உறவை இந்தச் சமூக ஊடகங்கள் நமக்கு உருவாக்கித் தருவதைப்போன்ற பிம்பம் இருக்கலாம். ஆனால், நம்மை மேலும் மேலும் இறுகச்செய்து மனிதத்தைக் கூறுபோட்டு வீசும் வேலையைத்தான் வேகமாகச் செய்துகொண்டிருக்கின்றன'' என வா.மணிகண்டன் சொல்வது நினைவில்கொள்ள வேண்டிய கருத்து.

நவீனத் தொடர்பு ஊடகங்கள் நமக்குத் தகவல்களையும் ஆச்சர்யங்களையும் அள்ளித் தருகின்றன. அறிவு என்பது, யாரோ சிலருக்குச் சொந்தமானது என்ற நிலையை உடைத்திருக்கின்றன. ஆனால், இவை அடிப்படை மனித உணர்வுகளை மழுங்கடித்து எல்லாவற்றையும் வெறும் பொழுதுபோக்காக மாற்றுகின்றன. மெய் உலகின் அழகை நிராகரித்து மெய்நிகர் உலகை ஆராதிப்பதால் என்ன பயன்? இந்த உலகின் பேரழகுகள் யாருக்காக? எல்லாம் உங்களுக்காக. கேண்டிகிரஷ்ஷில் இருந்து கையை எடுங்கள். பால்வீதியில் முளைத்துக்கிடக்கும் கோடிக் கோடி நட்சத்திரங்கள் அழைக்கின்றன. அவற்றுக்குக் கண்களைக் கொடுங்கள்!

 பாரதி தம்பி ஆனந்த விகடன்

 

திங்கட்கிழமை, 04 மே 2015 11:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # Mohamed Aarif 2015-10-05 13:35
Jews(Israel people) are going to destroy all the virtues of people except them. All the slow poison product are made by Jews. (Games, Faceboook, whatsup and etc..)


Allah say that the Jews do only the wrong things to the people. But they know which is correct. but they do onoy wrong.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh