MYPNOThu04262018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நான் கண்ட மும்பை...

  • PDF

கேட்வே ஆப் இந்தியா, தாஜ் ஹோட்டல், மெரைன் ட்ரைவ், கடற்கரை, இன்னும் இது போன்ற வசீகர சுற்றுலாத்தளங்கள் இல்லாமல் இது மும்பையின் மற்றொரு முகம்.

ஆண்டாண்டு காலமாய் எளிய மனிதர்களின் வியர்வையினால் உருவான நகரத்தில் அவர்களை அவர்களின் விளிம்புநிலையிலேயே இருக்க வைத்து மேல்தட்டு மக்களுக்கான நகரம் மட்டும் உருவாகிறது. இதற்கு மும்பையும் விதிவிலக்கல்ல.

இது நான் கண்ட மும்பை...

15 வருடங்களுக்கு முன்பு சென்று வந்த என் தந்தை நான் மும்பை கிளம்புவதற்கு முன் சொன்னார் “ரயிலில் பார்த்து போ, பாக்கெட் பாத்திரம், அதிகமான கூட்டம் வரும், பப்ளிக் டாய்லெட் தான், வேண்டுமென்றே முகவரி மாற்றி சொல்வார்கள், இன்னும் இத்தியாதிகள்” அம்மா சொன்னார் “15 வருஷம் முன்னாடி நீங்க போனிங்க இப்போ எவ்வளவோ மாறியிருக்கும்” என்று.

15 வருடத்தில் வானுயர்ந்த Navi Mumbai கட்டிடங்களையும், மெட்ரோ, மோனோ ரயில்கள், மால்களையும் தவிர விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய மற்ற எதுவுமே மாறியிருக்கவில்லை. மனிதம் செத்தால் தான் மாநகரம் உருவாக முடியும் போல. சென்னை எனக்கு அவ்வளவாக பிடிக்காது , இரைச்சல் , புன்சிரிப்பு கூட இல்லாத முறைத்த முகங்கள் இன்னும் பல. வன்புணரப்பட்ட சென்னையாக இருக்கிறது மும்பை. நகர வாசனை அறியாத இயற்கை விரும்பியின் எகத்தாள எழுத்து என்று உங்களுக்கு எண்ணம் ஏற்படலாம்.

ஒரு நகரம் என்பது அந்த நகரவாசிகளின் அடிப்படை தேவைகளில் தன்னிறைவடைந்திருக்க வேண்டும், நவீன தொழில்நுட்பங்களுடன் ஜன நெரிசல் போன்றவற்றை சமாளிக்கும் போக்குவரத்து வசதிகள், ஒவ்வொரு நகரவாசிக்குமான வருமான உத்திரவாதம் இது போன்றவைகளை கொண்டதே. அந்த வகையில் நிச்சயம் மும்பை ஒரு சிறந்த நகரம்.

32 மணி நேர ரயில் பயணம்.... ரயில் பயணம் என்றாலே எல்லோருக்கும் ஒட்டிக்கொள்ளும் சுவாரசியம் எனக்கும். ஆனால் என்னவோ காடுமலைகளுக்குள்ளாக செல்லும் ரயில் பயணம் சக மனிதர்களை எளிமையான முகங்களை காணும் பேருந்து பயணம் போல அவ்வளவு சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை. பாதிநேரம் தூக்கம் மீதி நேரம் புத்தகங்களுடனும் ஜன்னல் வெளியிலும். நண்பனுடன் சேர்ந்து இந்த வயதுக்கேயுரிய சக பயணிகள் குறித்த கிண்டல்களே நேரத்தை தின்றன. J

மும்பையில் காலடி எடுத்து வைத்தவுடன் எங்களை வரவேற்க வந்த நண்பன் சொன்னது “பொருள் பத்திரம்”.

சென்னையின் வடசென்னைபோல மும்பையின் பிற்படுத்தப்பட்ட எளிமையான மனிதர்கள் வாழும் சிவ்ரி, சீத்தா கேம்ப் போன்ற இடங்களில் தங்கியது எண்ணற்ற அனுபவங்களை தந்தது. பத்துக்கு பத்து இடத்தில் சமையலறை குளியலறை , கழிவறை இல்லாமல் ஒரு குடும்பமே வசிக்கும் காக்கா முட்டை பகுதி.

நவி மும்பைக்கும் இந்த பக்கம் உள்ள மும்பைக்கும் இடையில் உள்ள வாஷி பாலம் உயர்தர வர்க்கத்திற்கும் விளிம்புநிலை வர்க்கத்திற்குமான இடைவெளியின் சாட்சி.

திறந்த வெளியில் மலம் கழிப்பது, பெண்கள் ஆண்கள் எழுவதற்கு முன்பே இயற்கை உபாதைகளை முடிக்க எழுவது போன்றவைகள் மும்பை “மாநகரத்தில்” இன்னமும். இவை ஏதோ ஒரு சில இடங்களில் அல்ல 30 சதவீத மும்பை இன்னமும் இப்படித்தான், நிச்சயம் இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

காலையில் சாயாவுடன் காரி, இரவு பெரும்பாலும் சப்பாத்தி, மதியநேரத்தில் மத்திய வர்க்கம் சாப்பிடுவதே இல்லை, வடபாவையும், பானிபூரியையுமே பலரும் மதிய உணவாக உண்ணுகின்றனர். எங்கு பார்த்தாலும் ஜன நெரிசல், திட்டமிட்டு கட்டமைக்கப்படாத நகரமாகவே உள்ளது என்றே தோன்றுகிறது.

பாவ் பஜ்ஜி, வடபாவ், ஷாலிமார் ஃபலூடா, பாணி பூரி, இன்னும் பல பாவ் வகைகள் என உண்பதற்கும் ஆயிரம் வகைகள். டாக்சி கட்டணம் குறைவாகவும் பேருந்து கட்டணம் அதிகமாகவும் உள்ள முரண்.

மும்பை லோக்கல் ரயில்களில் ஏறி சரியான நிறுத்தத்தில் இருந்குவதே பெறும் சவால். இந்தியாவின் வர்த்தக தலைநகரத்தில் வர்க்க பேதம் இல்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். சென்னை போன்ற ஒரு வெள்ளத்தை சந்திக்கும் போது நிச்சயம் சென்னை போன்ற ஒரு மனிதம் அங்கு எழுமா என்பது சந்தேகமே. சுயநலமான சிந்தனையுடைய மக்களையே பெரும்பாலும் அந்த நகரம் உருவாக்கி வைத்துள்ளது.

இன, மத வெறியுள்ள இளைஞர்கள் அதிகம் இல்லாத தமிழகத்தை அடிக்கடி எண்ணி பெரியாருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.

மும்பை என்றாலே திருநங்கைகள் குறித்தும் சிகப்பு விளக்கு பகுதிகள் குறித்தும் நையாண்டியுடனும் ஒரு வகையான மூடுசபலத்துடனும் பலரும் பேசுவதை அனைவரும் கேட்டிருக்க கூடும். பொதுவாகவே ரயிலில் ஏறும் திருநங்கைகள் குறித்து எனக்கு ஒரு அச்சம் உண்டு. மும்பையை பொறுத்தவரை அந்த அச்சம் முதல் நாள் மட்டுமே இருந்தது. காசு கேட்பார்கள் பதில் சொல்லவில்லை என்றாலும் காசு இல்லை என்று சொன்னாலும் அமைதியாக அடுத்த நபரிடம் சென்று விடுங்கின்றனர். அசௌகரியமான காரியங்களை செய்யும் திருநங்கைகள் ஒருவரை கூட நான் பார்க்கவில்லை. (சில விதி விளக்குகள் இருக்கலாம்).

காமாதிபுரா... ஆசியாவின் இரண்டாவது பெரிய சிகப்பு விளக்கு பகுதி(முதலாவது கொல்கத்தாவின் சோனாகாஜி)

கேட் ஆப் இந்தியா போகும் வழியில் பார்க்க நேர்ந்தது இந்தியாவின் வர்த்தக தலைநகரத்தில் போலிஸ் பாதுகாப்புடன் அருமையான “வர்த்தகம்” நடந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய நகரத்தில் வற்புறுத்தலாலும் பிழைப்புக்கு வேறு வழியில்லாமலும் உடலை விற்க இவ்வளவு பேர், அவர்களுக்கான வேறு பாதைகளை காட்ட முடியாததற்கு தார்மீக பொறுபேற்று அதற்கு துணைபோகும் அரசு, இதை விட ஒரு கேவலம் என்ன இருந்துவிட முடியும். இரவு பண்ணிரண்டு மணிவரையிலும் எந்த கஸ்டமரும் வராமல் காத்திருக்கும் விலைமாதின் மனது என்ன எண்ணிக்கொண்டிருக்கும் என்ற யோசனையே அன்றைய பொழுதை ஆக்கிரமித்திருந்தது.

கேட் ஆப் இந்தியாவும், தாஜ் ஹோட்டலும் வலியான வரலாற்று நினைவுகளை கண் முன் நிறுத்தியது.

அலைச்சல்களே ஒரு நகரத்தை முழுதும் உள்வாங்கிக்கொள்ள உதவும் அந்த வகையில் என்னுடைய சொந்த வேலைநிமித்தமான அலைச்சல்கள் எப்போதும் போல ஒரு நகரம் குறித்து பொதுவாக புகட்டப்படும் பார்வையை மீள்கட்டமைப்பு செய்தது, எத்தனை எததனை மனிதர்கள் எத்தனை வகையான கலாச்சரங்கள்.

மனிதம் கொஞ்சமும் உள்ள ஒரு சில மனிதர்களாலேயே இந்த மாநகரமும் இன்னமும் உயிருடன் உள்ளது.

முன்பு சொன்னது போல வன்புணரப்பட்ட சென்னையாகவே மும்பையை பார்கிறேன். சென்னையும் கற்பழிக்கப்படாமல் இருக்கட்டும். மனிதம் இறந்துதான் ஒரு மாநகரம் உருவாக முடியுமானால் நான் கிராமத்தையே விரும்புகிறேன்.

நிச்சயம் இது ஒரு பயணக்கட்டுரை அல்ல, அதற்கான எந்த ஏற்பாட்டுடனும் நான் இதை எழுதவில்லை. என்னுள் எழுந்த எண்ணங்களின் வார்ப்பகவே என் எழுத்தை தந்துள்ளேன்.

பத்துநாள் பயணம் முடித்து பரங்கிப்பேட்டையில் கால் வைத்தவுடன் நினைத்தது “பரங்கிப்பேட்டை ந(க)ர(க)மாகிவிட கூடாது” என்பதே.

 

 

 

 

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016 11:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh