Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

உங்கள் குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துகிறீர்களா?

  • PDF

pampers skin diseas

உங்கள் குழந்தைக்கு இருபத்தி நான்கு மணிநேரமும் டயப்பர்(அதாங்க pampers)பயன்படுத்துகிறீர்களா?அப்ப அவசியம் படியுங்கள்.

பிஞ்சுக்குழந்தைகளுக்கு சுத்தமான பருத்தித் துணியைக் கட்டிவிட்டு, அது நனைந்ததும் துவைத்து, உலர்த்தி மீண்டும் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. எப்போதாவது வெளியூர் செல்லும்போது மட்டுமே டயப்பர் பயன்படுத்திய காலமும் போய், தற்போது எந்த நேரமும் டயப்பரோடுதான் இருக்கிறார்கள் குழந்தைகள். ஒரே முறை பயன்படுத்துவதால் ஹைஜீனிக்கானது, துவைக்கும் வேலை மிச்சம் போன்ற செளகரியங்கள் இருந்தாலும், வெப்ப மண்டல நாடுகளில், குறிப்பாகக் கோடை காலத்தில் டயப்பர் பயன்படுத்துவது, அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது, டயப்பர் டெர்மடைடிஸ்.

எப்போதும் டயப்பர் அணிந்துகொண்டிருக்கும் குழந்தைகளுக்குத் தோலில் ஏற்படும் பிரச்னைதான் இது. 9 முதல் 12 மாதங்கள் வரை உள்ள கைக்குழந்தைகளே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வண்ணத்துக்காகச் சிலவகை டைகளும், நறுமணத்துக்காகச் சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால், குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். மேலும், டயப்பரை அடிக்கடி மாற்றாமல் அப்படியேவிடுவதால், பூஞ்சைத் தொற்றும் ஏற்படக்கூடும். இதனாலும், சரும எரிச்சல், ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தையின் சருமம் தடித்துப்போகும்.

தொடர்ந்து சருமம் ஈரப்பதத்துடன் இருந்தால், குழந்தையின் பின்புறம், அடிவயிறு, பிறப்புறுப்பு, மேல்தொடை சிவந்து காணப்படும். தொடக்கத்தில் தோல் லேசான சிவப்பு நிறத்தில் இருக்கும். பிறகு, தடிப்பு ஏற்பட்டு, வலி எடுக்க ஆரம்பிக்கும். பிறகு, தோல் உரியத் தொடங்கும். அப்படியே கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால், தொடை மடிப்புகளின் இடையில் உள்ள பகுதி, பூஞ்சைத்தொற்றால் அடர் சிவப்பு நிறத்துக்கு மாறி, மஞ்சள் நிறத் திரவத்தால் ஆன  கொப்புளங்கள் ஏற்படும். தோல் பிளவுபட்டு, சிறுசிறு துகள்களாக உதிரும். குழந்தையின் பிறப்புறுப்பின் மேல் அலர்ஜி உண்டானால், அரிப்புடன் தோல் செதில்செதிலாக உதிரும்.

பிற சருமப் பிரச்னைகள்

சில சமயங்களில் டயப்பர் அல்லாத காரணங்களாலும் ஒவ்வாமை தோன்றும். இதை,  `சீபொரியா’ (Seborrhoea) என்பார்கள். குழந்தையின் தோலில் உள்ள சீபம் அதிகமாகச் சுரப்பால், சிவப்புத் திட்டுக்கள் தோன்றி பிசுபிசுப்பான மஞ்சள் திரவம் குழந்தையின் தொடை இடுக்குகளிலும் புட்டத்திலும் தோன்றும். சில குழந்தைகளுக்கு, தலை, அக்குள், கழுத்து, முகத்திலும் இந்தப் பாதிப்பு இருக்கும். சில குழந்தைகளுக்கு அடாபிக் டெர்மடைடிஸ் (Atopic dermatitis) என்ற பிரச்னையாலும் தோல் வறண்டு, நமைச்சல் இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

சருமப் பிரச்னையால் சில குழந்தைகளுக்குக் காய்ச்சல், ரத்தத்துடன் கூடிய மலம் வெளியேறுதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். தோலின் மேற்புறத்தில் உள்ள பாக்டீரியா, தொடை மடிப்பில் ஏற்பட்ட அரிப்புப் புண்ணின் வழியே உடலுக்குள் செல்லும்போது இத்தகையப் பாதிப்பு உருவாகிறது. எனவே, தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

 

.dr.pusshpa

தடுக்கும் வழிகள்

எப்போதும் குழந்தைக்கு டயப்பர் அணிவித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தையைக் குளிக்கவைத்ததும், மிருதுவான பருத்தித் துணியால் ஈரப்பதம் போக, நன்கு துடைக்க வேண்டும். அழுத்தித் துடைப்பது தவறு.

எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர் உடல் முழுவதும் பூச வேண்டும்.

காற்றோட்டம் இருக்கும் இடத்தில் குழந்தையை வைத்திருக்க வேண்டும்.

எப்போதும் சுத்தமாக இருப்பது அவசியம். துணியைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனைக் கொதிக்கும் நீரில் அலசித் துவைத்து, மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

ஒரு முறை சிறுநீர், மலம் கழித்ததும் டயப்பரை மாற்ற வேண்டும். டயப்பர் மாற்றும் முன்பு, குழந்தையின் சருமத்தை வெதுவெதுப்பான நீரால் துடைத்துவிட்டு மாற்றுவது நல்லது. அதிக வாசம் இல்லாத, அதிக ரசாயனம் இல்லாத சோப்பைப் பயன்படுத்தலாம்.

மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் டயப்பர் மாற்றுவது அவசியம்.

பச்சிளம் குழந்தையாக இருந்தால், அடிக்கடி  மாற்ற வேண்டும்.

டாக்டர் புஷ்பா ஞானராஜ்

நன்றி: Doctor Vikatan

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016 11:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh