Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஆள்காட்டி விரலல்ல; கலிமா விரல்!

  • PDF
பிரிந்தே இருக்கிறாய்
அதனால் நீ
பிறழ்ந்தே இருக்கிறாய்
என் சமூகமே!
 
கண்களே, கண்களே
என் சமூகக் கண்களே
இனியேனும்
காட்டிக் கொடுக்காதிருங்கள்.
 
கைகளே, கைகளே
என் நேசக் கரங்களே
இனியேனும்
கண்ணீர் துடைக்க வாருங்கள்
 
என் சகோதரனே…..
என் ஆதங்கமெல்லாம்
எதிரியிடம் கூட காட்டாத வன்மத்தை
என்னிடம் காட்டுகிறாய்
எதிரியிடமோ
என்னைக் காட்டுகிறாய்.
 
இறையும் மறையும்
நிறைவாய் வந்த தூதரும்
குறையேயின்றி  உன்னில்
கொள்வர் ஆளுமையெனில்
எப்படி நீ
பிரிவினைச் சாத்தான்களிடம்
பணிந்து போகிறாய்?
 
பொது எதிரியை வெல்வதற்கே
போராடுகிறாய் ஆயுளெல்லாம்.
ஆனால் தனித்தனியாக….
இது என்ன கொடுமை!
இது என்ன மடமை!
 
உணர்ந்தே இருக்கிறோம்
நீயும் நானும் ஒருவரல்லர்
ஆனால்
சகோதரர்கள் என்பது
சத்தியம் தானே.
 
நானே என்னும்
ஆணவத் தான்மை விடு.
நன்மையே என்னும்
அரவணைப்பின் மேன்மை எடு
 
புரிந்துகொள்
பிரிவினை வேண்டாம் ஒருபோதும்.
பிரிவினை வேண்டின்
பிறவினை வேண்டாம்
நம்மை அழிக்கத் துடிக்கும்
நரகச் சாத்தான்களுக்கு.
 
என்கருத்தும் உன்கருத்தும்
ஒத்துப் போவதேயில்லை
என்பது
உண்மையாகவே இருக்கட்டும்
என்றாலும் அதை
வீட்டுக்குள் மட்டுமே
விவாதிப்போம்
வீதியில்  வேண்டாமே காட்சிகள்.
 
உனக்காக வாதிக்கிறாய்
எனக்காகத் தீர்ப்பெழுதுகிறாய்
என் அன்புச் சகோதரனே…
இனியேனும் நாம்
நமக்காக வாதிப்போம்.
 
அப்போது தான்
இந்த சமூகக் களத்தில்
தீர்ப்பெழுதுகிறவன் இறைவனே என்ற
திட நம்பிக்கை
வலுப்படும் முற்றிலுமாய்
வழிநடத்தும் ஒற்றுமையாய்.

-இப்னு ஹம்துன்
சமரசம் இதழில் பிரசூரமான Mypno ஆசிரியர் இப்னு ஹம்துனின் கவிதை

Add comment


Security code
Refresh