Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வெள்ளத் தடுப்புக் குழுக்களுக்கு ஆட்சியர் உத்தரவு

  • PDF
வெள்ளத் தடுப்பு குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என ஆட்சியர் த.பொ.ராஜேஷ் உத்தரவிட்டார்.
 
வடகிழக்குப் பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரங்கிப்பேட்டை, புவனகிரி, குமராட்சி மற்றும் காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துத் துறை அதிகாரிகள் கொண்ட குழுக்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டங்களில் ஆட்சியர் பேசியதாவது:
 
வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அதிகம் பாதிப்புக்குள்ளான இடங்கள், அதிகம் பாதிப்படைய வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அங்கு தூர்வாருதல், மதகுகளை சரி செய்யும் பணி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராம அளவில் முதலில் உதவுபவர்களாக குறைந்தது 5 நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
இவர்கள் வெள்ளம் ஏற்படும்போது உடனடியாக குழுத் தலைவர்களுக்கும், மாவட்ட தலைமையகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 என்ற எண்ணுக்கும், அவசர கால தொலைபேசி 04142- 220700 என்ற எண்ணிலும் தகவல் அளிக்க வேண்டும்.
 
வெள்ளத்தால் சாலைகளில் பாதிப்பு ஏற்படும்போது, மாற்றுவழிகளில் வாகனங்களை திருப்பிவிட்டு, தடையின்றி போக்குவரத்து நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
மீன்வளர்ச்சித் துறை மூலம் 50 படகுகள் தயார் நிலையில் உள்ளன. பொதுப்பணித் துறையினர் தேவையான அளவுக்கு மணல் மூட்டைகளையும், சவுக்கு கட்டைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
 
பின்னர் பரங்கிப்பேட்டை அன்னன்கோயில் மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கட்டுமரம், கன்னத்தோணி, வள்ளம் போன்ற படகு வகைகளை பார்வையிட்டார்.
 
மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், தேசிய நெடுஞ்சாலைத் துறை வருவாய் அலுவலர் குணசேகரன், வருவாய் அலுவலர் மணிமேகலை, சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, காவல் துணைக் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேலு, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மதியழகன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2016 11:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh