Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் மீட்புகுழு தயார்நிலையில் இருந்தும் வலுவிழந்த நடா புயல்! (படங்கள்)

  • PDF

பரங்கிப்பேட்டை: கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தொடர் கனமழை பெய்தது. இதனால் வழக்கமான ஆண்டு சராசரியை விட மழை கூடுதலாக பதிவானது.  இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது.

கால்வாய்கள், கழிவுநீர் வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு செல்லும் நீர் வழி தடங்கள் தூர் வாரப்பட்டு தயார் நிலையில் இருந்தது. பரங்கிப்பேட்டையிலும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதம் முழுவதும் மழை பெய்யவில்லை. கோடை வெயிலை போன்று கடுமையான வெயில் அடித்தது. நவம்பர் மாதத்திலும் மழை பெய்யவில்லை.

ஆனால், நவம்பர் மாதத்தின் இறுதியில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனி சூழ்ந்தது. இதனால் இனி மழை இருக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆண்டு சராசரி மழை அளவில் 16 சதவீதம் மழை மட்டுமே இதுவரை பெய்துள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை திடீரென புயல் சின்னமாக உருவெடுத்தது. இதனால் பேரிடர் மீட்பு குழு பரங்கிப்பேட்டையில் முகாமிட்டிருந்தனர். இதற்கிடையே மாவட்ட நிர்வாக ஏற்பாட்டில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் நேற்று பகல் பேரிடர் மீட்பு ஆலோசனை கூட்டம் நடைடபெற்றது. இதில் புவனகிரி வட்டாச்சியர் நாசிரா இக்பால், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத் தலைவர் எஸ். ஓ. செய்யது ஆரிப், ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர்.

எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணி தயார் நிலையில், நடா புயலால் பரங்கிப்பேட்டை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், நேற்று காலை 6 மணி முதல் லேசான மழை பெய்தது. மாலை 5 மணியளவில் மழை சற்று வலுத்தது. அதன் பிறகு இரவு நேரம் முழுவதும் மழை பெய்யவில்லை. அதன் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை மழை பெய்யவில்லை.

‘நடா’ புயல் கரையை கடந்த அதிகாலை 4 மணியளவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், பரங்கிப்பேட்டையில் மழை பெய்யவில்லை. மாறாக பரங்கிப்பேட்டையில் இன்று பகல் முழுதும் நல்ல வெயில் அடித்தது.

வெள்ளிக்கிழமை, 02 டிசம்பர் 2016 18:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh