Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்: அதிகாuபூர்வ அறிவிப்பு!

  • PDF

சென்னை: கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா (05-12-2016) திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறிது சிறிதாக நீக்கப்பட்டு, இயற்கையாக சுவாசிக்கும் நிலைக்கு வந்தார். அவருக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த மேரி, சீமா ஆகியோர் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு முதல்வரை மாற்றினர். அப்போது, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது, "முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் விரும்பும்போது வீட்டுக்குச் செல்லலாம்" என்றார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். முதல்வர் உடல்நிலை தொடர்பான செய்திகளால் பதற்றம் நிலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இதய நோய், நுரையீரல் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், முதல்வர் உடல்நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சென்னை வந்தார். ராஜ்பவனில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு அப்போலோ மருத்துவமனை வந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை ஆகியவற்றை அறிந்துகொண்டு, மீண்டும் ராஜ்பவன் திரும்பினார்.

இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பகல் 12.30 மணிக்கு மீண்டும் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், 'முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு எக்மோ (ECMO) என்ற கருவி மூலம், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்தது.

முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில், தீவிர அளித்தும் பயனின்றி முதல்வரின் உயிர் 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது!  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை  அறிவித்துள்ளது.

 

 

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016 12:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh