Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அதிதீவிர புயல் "வர்தா" சென்னை அருகே கரையை கடக்கிறது : தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுக்கள்!

  • PDF

வங்க கடலில் உருவாகிய அதிதீவிர புயலான வர்தா, நாளை (திங்கள்) பிற்பகல் அல்லது மாலையில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியி்ல் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘வர்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வர்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னைக்கு அருகில் நாளை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இது தொடர்பாக ஞாயிறு மாலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலில் உருவான "வார்தா’ புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 - 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது, நாளை (திங்கள்) பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து நாளை (திங்கள்கிழமை) காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடல் சீற்றமானது, இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கக் கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் கூறினார்.

தமிழகத்தில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

வர்தா புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 4 நிலைகளில் அடையாளம் காணப்பட்டு, தேவையான மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய வானிலை அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளன. தேவையான உணவு, சுகாதார வசதிகள் தங்குமிடங்களில் செய்யப்பட்டுள்ளன. வர்தா புயலில் இருந்து 100 சதவீதம் மககளை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரிகள் அறிவுறுத்தல் பேரில் நடந்து கொள்ள வேண்டும். மாநில அளவில் 1070, மாவட்ட அளவில் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான உதவியை நாடலாம். நவம்பர் மாதம் போதுமான மழை கிடைக்காமல் பற்றாக்குறை நிலவியது. டிசம்பரில் கூடுதல் மழை கிடைத்தாலும் அதை உரிய முறையில் பாதுகாத்து, மக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல்  சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதனால் நாலை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016 12:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh