MYPNOWed03212018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பாதுகாப்பான தமிழகத்துக்கான மிதிவண்டி பயண குழுவினர் பரங்கிப்பேட்டை வருகை!

  • PDF

பரங்கிப்பேட்டை: இயற்கை வளங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள நண்பர்கள் குழுவினர் நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டை வந்தனர். சென்னையைச் சேர்ந்த பாரதி கண்ணன் தலைமையில் பாதுகாப்பான தமிழகத்துக்கான மிதிவண்டி பயணம்- 2016 என்ற தலைப்பின் கீழ் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  

 

தாம்பரம் நண்பர்கள் குழுவினர் சென்னையை மையமாக கொண்டு இயற்கை வாழ்வியல், விவசாயத்துக்கான பல்முனை முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இக்குழுவில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் 115வது நாளான கடந்த வெள்ளி (16-12-2016) அன்று பரங்கிப்பேட்டை அப்பாப் பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பயணக் குழுவைச் சேர்ந்த பாரதி கண்ணன் தங்களின் பயண நோக்கம் குறித்தும் இயற்கை வளங்கள் குறித்தும் விழிப்புணவு  உரையாற்றினார்.

முன்னதாக, பரங்கிப்பேட்டைக்கு வருகை புரிந்த இக்குழுவினரை ஊர்மக்கள் சார்பில் பசுமை ஹாஜி மற்றும் சமூகநல ஆர்வலர்கள் வரவேற்றனர். மருத்துவர் பூபதி இல்லத்தில் நடைபெற்ற சிறு அமர்வில் பாரதி கண்ணன் நம்மிடையே (MYPNO) பேசும்போது, இறைவன் அளித்துள்ள வளங்களை மதிக்காததனால் அவ்வபோது உண்டாகும் சின்னஞ்சிறு பாதிப்புகளை கடந்து இன்று பேரழிவை நோக்கி நாம் அனைவரும் சென்று கொண்டு இருப்பதை கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை மழை வெள்ளம் நமக்கு எச்சரித்து சென்றுள்ளது. இன்று உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயமாக்கலால் ஏற்படும் காலநிலை சிதைவிற்கான முக்கிய காரணம் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ள 'வளர்ச்சி' என்னும் நுகர்வு மாயை. இந்த நுகர்வு மாயையினால் கட்டமைக்கப்பட்ட 'வளர்ச்சியினால்' நாம் அடைந்ததைவிட இழந்ததே அதிகம், இதனால் தமிழகத்தை பாதித்துள்ள சூழலியல் பிரச்சனைகள் ஏராளம். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சுற்றுசூழல் சார்ந்த பாதிப்புகள் உள்ளது என்பதை நாம் கவனிக்க தவறுகிறோம்.

ஆகவே, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்காத பிளாஸ்டிக்கை (நெகிழி) பயன்படுத்தும் நவீன நாகரிகம், நிலத்தடி நீரை உறிஞ்சுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள், நம்மை நடை பிணமாக்கும் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடையாகி போன நம் ஆறுகள், ஆக்கிரமிக்கப்பட்ட நம் நீர்நிலைகள்,  உயிர்கொல்லி உரம் பயன்பாட்டினால் மலடாகி போன நம் நிலம், நஞ்சாகிபோன நம் உணவு, மருந்து நிறுவனங்களுக்கு பணம் கொழிக்கும் பொருளாகிபோன நம் உடல், காசுக்கு விற்கப்படும் உயிர் நீர் இவைகள் பற்றி மக்களிடையே ஒரு தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த அபாயங்களில் இருந்து நம்மையும் நம்மைபோல் இந்த பூவுலகில் உயிர் வாழ்வதற்கு எல்லா உரிமையும் கொண்ட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மனிதனாகிய நமக்கு உள்ளதை உணர்த்தவும், சாமானிய மக்களிடம் இருந்து நாம் தொலைத்த பாரம்பரிய அறிவையும் அறம் சார்ந்த வாழ்கையையும் ஆவணப்படுத்துவதும், மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பயணத்தின் நோக்கங்களை பரவலாக கொண்டு செல்வதுமே எங்கள் பயணத்தின் இலக்கு" எனக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த பயணத்தில் நாங்கள் 1. காசுக்கு குடிநீரை வாங்கமாட்டோம், 2. குளிர் பானம், சோப்பு, பற்பசை போன்ற நமது அன்றாட உபயோகங்களான பன்னாட்டு
நிறுவனங்களின் பொருட்களை முற்றிலும் பயன்படுத்தமாட்டோம், 3. பாலித்தீன் பை போன்ற மக்காத குப்பைகளை ஏற்படுத்தமாட்டோம், 4. பணம் கொடுத்து ஓட்டல்களில் தங்க மாட்டோம், 5. உணவே மருந்தாக வாழ்ந்த நம்மை மருந்தே உணவாக வாழ காரணமான ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்று மக்களுடன்  விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்த்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது மருத்துவர் பூபதி, பசுமை ஹாஜி, ஹாமிது ஜாக்கிர், MYPNO ஆசிரியர்கள் ஹமீது மரைக்காயர், எம்.ஜீ.ஃபக்ருத்தீன் உடனிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2016 17:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+3 # K. N. 2016-12-18 16:48
Great EFFORT! பாராட்டப்பட வேண்டிய சிறந்த முயற்சி! வாழ்த்துவோம் - சென்னையைச் சேர்ந்த பாரதி கண்ணன் மற்றும் அவரது குழுவினரின் சைக்கிள் பயணத்தினையும் சேர்த்து!
(நம் வீட்டிலிருந்து .. பெரிய கடை, சின்ன கடை, சந்தை கடை, Bank, மருந்து கடை மற்றும் தொழுவதற்கு பள்ளிகளுக்கு செல்லும் போது - MOTOR BIKE - ஐ தவிர்த்து - சைக்கிள் பயணத்தினை மேற்கொள்வோம்!
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh