Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகள் மாற்றம்: விதிமுறைகள் தளர்வு!

  • PDF

பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாக்கும் வகையில், வெளியுறவு அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள், பிறந்த தேதிக்கான சான்றிதழாக, பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

இதை மாற்றி பிறப்புச் சான்றிதழ் மட்டுமின்றி, பள்ளி மாற்றுச் சான்றிதழ், பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசி பத்திரம், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் எனில், பணிச்சேவை சான்று, ஓய்வூதியச் சான்று ஆகியவற்றை, பிறந்த தேதிக்கான சான்றாகக் காட்டலாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தில் தாய் அல்லது தந்தை அல்லது சட்டபூர்வ காப்பாளர் பெயரைக் குறிப்பிட்டால் போதும். தாய்-தந்தை இருவர் பெயரையும் குறிப்பிட வேண்டியது கட்டாயமில்லை. பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் இணைக்க வேண்டிய 15 இணைப்புகள் என்பது 9 இணைப்புகளாக குறைக்கப்பட்டுள்ளது. இணைப்புகளை விண்ணப்பதாரரே சுய அறிவிப்பாக தெரிவிக்கலாம்.

அட்டஸ்டேஷன், நோட்டரி, மாஜிஸ்திரேட் ஒப்புதல்கள் போன்றவை தேவையில்லை. திருமணமான விண்ணப்பதாரர் திருமணச் சான்றிதழை சமர்ப்பிக்கத் தேவையில்லை. பிரிந்து வாழ்பவர்கள், விவாகரத்து செய்தவர்கள் வாழ்க்கைத் துணையின் பெயரைக் குறிப்பிட வேண்டியதில்லை.

ஆதவற்ற குழந்தைகளுக்கு பிறந்த தேதிக்கான சான்றிதழ் இல்லாதபோது, குழந்தை காப்பக தலைமைப் பொறுப்பில் உள்ளவர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளிக்கும் சான்று ஏற்கப்படும். திருமண உறவில் அல்லாமல் பிறந்த குழந்தைகள், பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைப்பு ஜி மட்டும் வழங்கினால்போதும். உள்நாட்டில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் எனில், அதற்கான பதிவு செய்யப்பட்ட தத்தெடுப்பு சான்றிதழ் தேவையில்லை. தத்தெடுத்ததை உறுதிசெய்யும் வகையில் வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரர் எழுதிக் கொடுத்தால் போதும். இந்த விதிமுறைகள் விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016 12:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh