MYPNOThu04262018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

12ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்; நினைவில் உள்ள கடலூர் மாவட்ட மீனவ கிராமங்கள்!

  • PDF
Ten years of tsunami: A memorial that leaves much to be desired
சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் தாக்கி 12 ஆண்டுகளாகியும் தமிழக கடலோரங்களில் அதன் சோக நினைவுகள் இன்னும் அகலவில்லை.
 
கடந்த 2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக அன்று காலை 8 மணிக்கு சுனாமி தமிழக கடலோர மாவட்டங்களை சூறையாடியது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.
 
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினை 12 ஆண்டுகள் கடந்தும், தனது சொந்தங்கள் பேரலையில் அடித்துச் சென்று இறந்ததை, இன்றும் மறக்க முடியாமல் கடலூர் மாவட்ட மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 
2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை தாக்கிய சுனாமி பேரலையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த 342 பேர் இறந்தனர். இதில் 93 குழந்தைகளும், 147 பெண்களும் அடங்குவர். சுனாமி பேரலையால் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடலோரத்தில் உள்ள இருந்த அழகிய தீவுகளான பில்லுமேடு, சின்னவாய்க்கால், எம்ஜிஆர் திட்டு ஆகியவை இருக்கும் இடம் தெரியாமல் போனது.
 
கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமிப் பேரலையில் 648 பேர் இறந்தனர். உறவுகள், உடைமைகள், வீடுகளை இழந்து 20 ஆயிரம் குடும்பங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. 1500 ஹெக்டேர் நிலங்களில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறியது. 608 ஹெக்டரில் நெற்பயிர்கள் சேதமடைந்தன.
 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் அப்போதைய ஆட்சியர்களாக இருந்த ககன்தீப்சிங்பேடி, ராஜேந்திரரத்னூ ஆகியோரின் சீரிய முயற்சியால் சுனாமி பாதித்த கிராமங்களில் நிரந்த குடியிருப்பு வீடுகள் கட்ட அரசால் 115 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு மீனவ குட்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
சுனாமி பேரழிவில் மிகுந்த பாதிப்படைந்து அதிர்ச்சியில் இருந்த மீனவ மக்கள் தற்போது மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்பிசுள்ளனர். இருப்பினும் தங்களது குடும்பத்தினரை இழந்ததை மறக்க முடியாமல் நினைவு தினத்தன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், பிரார்த்தனையில் ஈடுபடுவதை கண்டு வேதனையளிக்கிறது. மேலும் சுனாமி பேரலையின் பயம் மீனவர்கள் மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
 
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ம் தேதி இந்தோனேஷிய கடலில் ஏற்பட்ட பூகம்பத்தால் “சுனாமி” என்னும் ஆழிப்பேரலைகள் உருவானது. அந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு தெற்காசிய நாடுகளில் ஏராளமானோரை பலி கொண்டது. இந்தியாவில் இந்த ஆழிப்பேரலைக்கு தமிழகம், புதுவை, ஆந்திர மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.
 
சென்னையில் பொங்கி எழுந்த கடல் நீர் மெரினா கடற்கரையை மூழ்கடித்தது. மனிதர்கள், பொருட்கள், கடைகள் என அத்தனையையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது. மேலும் பேரலை தாக்கியதில் மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள், வீடுகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த ஆழிப்பேரலை தாக்கியதால் உயிர் இழப்பு அதிகமாக இருந்தது.
 
கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய மறுநாள் இந்த கோர சம்பவம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு தம்முடைய உறவினர்களை இழந்து நிற்கதியாய் மீனவர்கள் தவிப்பதை இன்றும் கடற்கரையோர கிராமங்களில் காண முடிகிறது.
 
கடற்கரையில் கிடந்த மனித உடல்களை சேகரித்து எடுத்து சென்ற சம்பவம் தற்போதும் நம் நினைவை விட்டு அகலவில்லை. கடற்கரை மண்ணில் புதைந்தும், படகுகள், முட்புதர்களுக்கு இடையேயும் கிடந்த நூற்றுக்கணக்கான மனித உடல்களை எடுத்து வந்த கொடூர காட்சி இன்னும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறது.  இது மட்டுமின்றி ஆழிப்பேரலையில் சிக்கி காணாமல் போன தங்களது குழந்தைகள் எங்காவது உயிருடன் கரை ஒதுங்கியிருப்பார்கள் என்று எண்ணிய பெற்றோர்கள், 4 மாதங்களுக்கு பிறகு தங்களது குழந்தைகளின் உடலை எலும்பு கூடாக கண்டெடுத்த சோகமும், கதறி அழுததும் இன்னும் நம் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
 
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த மீனவர்களின் படகுகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா மீது தூக்கி வீசப்பட்டன. இதேபோல் தென்னை மரங்களின் உச்சியில் இருந்தும் படகுகள் மீட்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து கடலூர் சில்வர் பீச்சுக்கு பெற்றோருடன் வந்த தெல்கா என்ற சிறுவனை சுனாமியில் இருந்து மீட்டு, அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் அந்த பெண், சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை. தற்போது அந்த சிறுவன் எங்கே இருக்கிறான் என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. அந்த சிறுவனை தேடி அவனது பெற்றோர் பல மாதங்களாக கடலூருக்கு வந்து கண்ணீருடன் தேடி அலைந்ததை மறக்கமுடியாது.
 
சுனாமி தாக்கியதில் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, கிள்ளை, பில்லுமேடு, பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், சின்னூர், சி.புதுப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடற்கரையோர கிராம மக்கள் அனைத்தையும் இழந்து தவித்தனர். கடலூர் மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்தவர்கள், தாயை மட்டும் இழந்த குழந்தைகள், தந்தையை மட்டும் இழந்த குழந்தைகள் உள்பட மொத்தம் 91 குழந்தைகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்தனர். தற்போது உயர்கல்வி, தந்தை அரவணைப்பில் சென்ற குழந்தைகளை தவிர 15 பேர் மட்டும் உள்ளனர். இவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
 
இந்த கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், ஆழிப்பேரலையால் ஏற்பட்ட வடுக்கள் மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. ஆழிப்பேரலை தாக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016 13:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh