
நான், என்னுடையது, என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு என்பதைத் தாண்டி சமூகம், சமூக நிலை, சமூக அந்தஸ்து, சமூகத்தின் தேவை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் என தனக்கும், பிறருக்கும் உள்ள அத்தியாவசியத் தேவைகள் குறித்த நம்முடைய பலரின் பார்வை கிட்டப்பார்வை என்றே சொல்ல வேண்டும்.
ஊரில் இரவு நேரங்களில் மருத்துவர் குறைப்பாடு பற்றி பேச அவரவருக்கு தேவை வரும்போது தான் தோன்றுகிறது. வத்தகரை செல்லும் போது தான் எரியும்/ எரியாத குப்பைகளைக் கண்டு முகம் சுளிக்கத் தோன்றுகிறது. மக்கள் வாழ தகுதி இல்லாத பகுதி என்ற பெயர்பெற்ற சிப்காடு நமதருகே இருந்தும் நம்மைச் சுற்றி தொழிற்புரட்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் படியான தொழிற்சாலைகள் குறித்த நம்முடைய விழிப்புணர்வு எங்கே? காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாததும், கண் கெட்ட பின் விடியலைக் காண ஏங்குவதும் ஏனோ?அடுத்தவர் வீடு தானே எரிகிறது என்ற எண்ணம் அந்தத் தீ நம் வீட்டுக்குப் பரவும் போது தான் எண்ண த் தாக்கம் ஏற்படுமா என்ன?
இவை அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்திற்கான சவால்கள் என்பதை காட்டிலும், மதம், இனம் ,ஜாதி தாண்டி அனைவருக்குமானது.
படிக்கும் மாணவன் இன்று புகைப் பழக்கத்துக்கும், மதுவுக்கும் அடிமை ஆகிறான் என்பதைக் கண்டும் கண்களைக் கட்டிக் கொள்வது என் வீட்டு பிள்ளை அப்படி இல்லை என்ற பெருமையிலா?அல்லது ஒருவர் புகைக்கும் போது வெளியிடும் புகை அருகில் உள்ளவர்கள் அதைச் சுவாசிக்கும் போது இவர்களும் புகைப்பதற்கு சமமே என்பதன் அறியாமையிலா? அல்லது நாம் என்ன செய்ய முடியும் என்ற சமூக சிந்தனை இன்றியா?
வெளியூரில், வெளிநாட்டில் வேலை செய்யும் தந்தை தன் மகனுக்கு நல்வழி காட்ட இயலாத போது சிறிய தந்தையாக/ மாமனாக/அண்ணனாக பொறுப்பேற்று நல்வழி காட்டவேண்டிய அண்டை வீட்டார்/ தெருவில் வசிப்போர்/ஊரில் உள்ளோர் அனைவரும் மௌனம் காப்பது சமூக அந்தஸ்தைப் பெற்றுத் தராது.
மாறாக சமூகத்துக்கு அவப் பெயரைத் தான் விட்டுச் செல்லும்.
ஒரு சமூகத்தின் பெருமை படிப்பில் மட்டும் அல்ல, நல்லொழுக்கத்திலும், பரஸ்பர அன்பு காட்டுதலிலும், சிறியோர் பெரியோரை மதிப்பதிலும், பெரியோர் சிறியோருக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்துதலிலும் , நம்மைச் சுற்றி உள்ள மற்ற சமூகத்தினரோடு அன்போடு பழகுதலிலும், சமூக முன்னேற்றத் திட்டத்திலும், சமூக முன்னேற்றத்தில் பங்குபெறுவதிலும் தான் அப்பெருமை உள்ளது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
நன்மைகள் பெற்று வாழ வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்
ஆக்கம் : முஹம்மது ஃபைசல்
பரங்கிப்பேட்டை