MYPNOThu04262018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மெரினாவில் 144 தடை உத்தரவு இன்று முதல் 15 நாள் அமலில் இருக்கும்

  • PDF
மெரினாவில் 144 தடை உத்தரவு இன்று முதல் 15 நாள் அமலில் இருக்கும்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட போராட்டம் கடந்த 17-ந் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 23-ந் தேதி மெரினாவில் இருந்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, மெரினாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் இளைஞர்கள் ஒன்று கூட திட்டமிட்டு இருப்பதாகவும், இளைஞர்கள் கட்சி ஆரம்பிக்க தீர்மானித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்காக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது.

இதனை உளவுப்பிரிவு போலீசார் முன்கூட்டியே நோட்டமிட்டு சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, மெரினாவை போராட்ட களமாக பயன்படுத்த அனுமதி இல்லை என்று கமிஷனர் ஜார்ஜ் நேற்று முன்தினம் அறிவித்தார்.

எனினும் இந்த தடையை மீறி மக்களோடு, மக்களாக இளைஞர்கள் மெரினாவில் ஒன்றுகூடி போராடலாம் என்று உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து மெரினாவில் அதிவிரைவுப் படை போலீசார் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். படகுகள் மூலம் யாராவது வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக கடற்கரை மணற்பரப்பிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். மெரினாவில் தடையை மீறி யாரேனும் போராட்டம் நடத்த முன் வந்தால், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

அதன்படி மெரினா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி வரை 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கமிஷனர் ஜார்ஜ் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக மெரினாவில் ஒன்றுகூடி போராட்டம் நடத்த வருமாறு வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் மீண்டும் மெரினாவில் போராட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

எனவே சமூகம் மற்றும் தேசத்துக்கு எதிரானவர்கள் பொது அமைதியை சீர்குலைக் கும் நோக்கத்தில் செயல்படுவதை தடுத்து அமைதியை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. இந்த தடை உத்தரவு மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளை உள்ளடக்கிய மெரினா, பட்டினப்பாக்கம், ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி, அண்ணாசதுக்கம், மயிலாப்பூர் ஆகிய 6 போலீஸ் நிலைய எல்லைகளுக்கு பொருந்தும்.

இந்த உத்தரவின்படி ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட்டம், மனித சங்கிலி, கூட்டங்கள், ஒன்றாக கூடுதல், குழு இயக்கங்கள் ஆகியவற்றிற்கு மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சுற்றுப்புற பகுதிகளில் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்றவற்றிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் வழக்கம் போல் மெரினா கடற்கரைக்கு வரலாம். நடைபயிற்சி மேற்கொள்ளலாம். குடும்பத்தினர் குழந்தைகளுடன் அமைதிக்காகவும், மனமகிழ்ச்சிக்காகவும், ஓய்வுக்காகவும் மெரினா கடற்கரைக்கு வரலாம். அவர்களுக்கு இந்த தடை உத்தரவால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த தடை உத்தரவை அமல்படுத்துவதற்கு சென்னைவாசிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த உத்தரவால் ஏதேனும் சிரமங்கள் ஏற்படுமானால் அதற்காக வருந்துகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

Add comment


Security code
Refresh