
குஜராத்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் வீட்டில் ரூ.1.26 கோடி பணம், 2.40 கிலோ தங்கம் மற்றும் 25 மது பாட்டில்கள் சிக்கின. புதிய 2,000 ரூபாய் நோட்டு குவியலை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட வட்காமில் முக்தேஸ்வர் மடம் உள்ளது. இந்த மடத்தை சேர்ந்த பெண் சாமியாரான ஜெயஸ்ரீ கிரி என்பவர் பலன்பூரில் வசித்து வருகிறார். இவர் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பிரிட்டேஷ் ஷா என்பவர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஜெயஸ்ரீ கிரி மற்றும் அவரது கூட்டாளி சிராக் ராவல் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் பெண் சாமியார் ஜெயஸ்ரீ கிரியின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது சாமியாரின் வீட்டின் ஒரு அறையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுக்குவியலும், தங்கக்கட்டிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் பணத்தை எண்ணிப்பார்த்தனர். அப்போது அதில் ரூ.1.26 கோடி இருந்தது. மேலும் 2.40 கிலோ தங்கமும் இருந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீசார் பக்கத்து அறை ஒன்றில் சோதனையிட்டனர். அங்கே 25 மது பாட்டில்கள் இருந்தன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுவான அவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக மதுபான தடைச்சட்டத்தின் கீழும் பெண் சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சாமியார் ஜெயஸ்ரீ கிரியை பலன்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரின் கடந்த கால குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண் சாமியார் ஜெயஸ்ரீ கிரி, தனது ஆன்மிக குருவும், முக்தேஸ்வர் மடத்தின் தலைவருமான சஞ்சய்கிரி மகராஜ் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.