MYPNOThu04262018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மணவை முஸ்தபா- தமிழ் உள்ள காலம் வரை வாழும் நின் புகழ்!

  • PDF
மணவை முஸ்தபா
உலகின் தொன்ம மொழிகளில் ஒன்று தமிழ். இயற்கையான வளமும் இலக்கணச் செழுமையும் மிகுந்த இம்மொழி பல்வேறு மொழிகளுக்குத் தாயாக இருக்கிறது. பிற மனிதக் குழுக்கள் சிந்திக்கப் பழகும் முன்பே, தமிழர்கள் தங்கள் மொழியால் வானத்தை அளந்தார்கள். பிரபஞ்சத்தின் சக்திகளை வார்த்தைகளால் காட்சியாக்கினார்கள். உலக மொழி வல்லுநர்கள் எல்லாம் தமிழின் ஆழத்தை, அற்புதத்தை சிலாகித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தமிழர்கள் அதன் மகத்துவத்தை மறந்து பல தலைமுறைகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மருத்துவமோ, பொறியியலோ, அறிவியலோ படிக்கத் தகுதியற்ற மொழி என்று தம் தாய்மொழிக்கு முத்திரை குத்திவிட்டு வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. இப்படியான காலக்கட்டத்தில், தமிழின் அறிவியல் சிறப்பை, செழுமையை  வெளிக்கொண்டு வருவதிலேயே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மணவை முஸ்தபாவின் மரணம், உண்மையில் பேரிழப்பு. 

மணவை முஸ்தபா

ஒரு மொழியின் சிறப்பே அதன் அறிவியல் தன்மை தான். வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத அறிவியல் தன்மை தமிழில் தளும்ப நிறைந்திருக்கிறது. கடும் ஆராய்ச்சிகள் மூலமும், களத்தேடல்கள் மூலமும் அவற்றை வெளிக்கொண்டு வந்து உலகத்தின் பார்வைக்கு வைத்து அங்கீகாரமும் பெற்றுத்தந்தவர் முஸ்தபா. காலத்துக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளாத மொழி நீடிக்காது. தமிழின் வளமையைப் புதுப்பிக்க அவ்வப்போது காலம் அறிஞர்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு மாண்புமிகு உயிர்ப்பு தான் முஸ்தபா. தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்ற குரல் பொதுத்தன்மையை எட்டி வலுவடைய பின்னணியாக இருந்தவர் இவர். வெறும் வார்த்தைகளாக இல்லாமல், தீவிர ஆய்வுகள் மூலம் அதன் செம்மொழித்தன்மையை நிரூபிக்கவும் துணை நின்றவர். யுனெஸ்கோவில் இருந்து ஏராளமான தரவுகளைக் கொண்டு வந்து தொகுத்து மத்திய அரசுக்கு அளித்தார். சுமார் 4.4 கோடி சொற்களைக் கொண்ட பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை தமிழுக்குக் கொண்டு வர அயராது உழைத்தவர். மொழியின் ஜீவன், கலைச்சொற்களில் தான் இருக்கின்றன. புதிது புதிதாக சொற்களை உருவாக்கும் அதே வேளையில், வட்டாரங்களில் தூய்மைத்தன்மையோடு இருக்கும் வார்த்தைகளையும் தேடியெடுத்து,  தூசிதட்டி பரவலாக்க வேண்டும். அந்த இரண்டு பணிகளையும் நேர்த்தியாகச் செய்தார் முஸ்தபா. 

உலகத்தைப் புரட்டிப் போட்ட கணினிப் புரட்சி, தமிழுக்கு மாபெரும் சவாலாக நின்றபோது, அதை இலகுவாக்கி மொழிக்குள் அடக்கிய பெருமையும் முஸ்தபாவுக்கு உண்டு. "கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி" என்ற அவரது பெரும் பங்களிப்பு, தமிழுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தது. கூகுள் போன்ற தேடல் இணையதளங்கள் அந்தக் களஞ்சியத்தில் இருந்தே தமிழ் மொழிக்கான வார்த்தைகளை எடுத்தாள்கின்றன. கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி, அறிவியல் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி, மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் போன்ற கலைச்சொல் அகராதிகள் தமிழுக்கு அவர் அளித்த பெரும் கொடைகள். தம் வாழ்நாளில் சுமார் 8.5 லட்சம் கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார் முஸ்தபா. அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தாலே ஒழிய ஒரு தனி மனிதருக்கு இது சாத்தியமில்லை. 

நமக்கு அருகிலே இருக்கும் இலங்கையில் மருத்துவமும், பொறியியலும் தமிழில் வழங்கப்படும் நிலையில், இன்னும் நாம் அதற்கான சில படிகளைக் கூட கடக்காமல் இருக்கிறோம். அதற்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகமும் ஆழ்ந்து உறங்குகிறது. தட்டுத்தடுமாறி பொறியியலில் தமிழ்வழியைக் கொண்டு வந்தபோதும், அதை மாணவர்களும் பெற்றோரும் நம்பத் தயாரில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசைப்பட்டு, வேறு ஆங்கில வழிப்படிப்புகள் கிடைக்காத நிலையில் தான் அதை தேர்வுசெய்கிறார்கள். அந்த வகுப்பறையிலும் தமிழ்வழி என்பது பெயருக்குத் தான். ஆசிரியர்களில் குரலில் ஒலிப்பதென்னவோ ஆங்கிலம் தான். 

வெறும் இலக்கியங்களால் மட்டுமே சிலாகித்து விட்டு அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் மொழியைப் புறம்தள்ளுவது கண்டு மனம் வெதும்பினார் முஸ்தபா. ஒரு அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனியொரு மனிதனாக முன்னின்று செய்தார். தமிழில் அறிவியல் எழுத்தை, சிந்தனையை வெகுவாக ஊக்கப்படுத்தினார். இளம் எழுத்தாளர்களை எழுதத்தூண்டினார். அனைத்து அறிவியல் தமிழ் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து, அறிவியல் தமிழ் கருத்தரங்குகளை நடத்தினார். மொழியைக் கையாள்வதில் எந்த சந்தேகம் தோன்றினாலும் இளம் எழுத்தாளர்கள் தட்டுவது முஸ்தபா வீட்டுக் கதவைத் தான். எந்த நேரத்திலும் எதைப்பற்றியும் பேசலாம் அவரிடம். 

முஸ்தபாவின் சொந்த ஊர் மணப்பாறை அருகில் உள்ள இளங்காகுறிச்சி. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பட்டப்படிப்பையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளையும் முடித்தார். மனைவி பெயர் சவுதா. அண்ணல், செம்மல் என்ற 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் இருக்கிறார்கள். இஸ்லாம் மீது பிடிப்பு கொண்ட முஸ்தபா, அதில் உள்ள அறிவியல் தன்மை, சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சி நூல்களையும் எழுதியிருக்கிறார்.  தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள், பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம், இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?, இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், அண்ணலாரும் அறிவியலும், சமண பௌத்த கிருஸ்துவ இஸ்லாமிய இலக்கியங்கள், தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், சிந்தைக்கினிய சீறா, இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் போன்ற நூல்கள் அவரின் பங்களிப்புகளில் பிரதானமானவை. 

யுனெஸ்கோ நிறுவனம், தமது அதிகாரப்பூர்வ செய்தி ஏடாகிய "யுனெஸ்கோ கூரியர்" இதழை தமிழில் கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டவர் முஸ்தபா. மத்திய அரசு, வழக்கம்போல ஒரு பிராந்திய மொழிக்கு அப்படியான முக்கியத்துவம் கிடைக்கக்கூடாது என்று பல தடைகளை உருவாக்கிய போது, தமிழக அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்து, மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அதன் விளைவாக, இந்தியாவில் ஒரே பிராந்திய மொழியாக தமிழில் தம் இதழைக் கொண்டு வந்தது யுனெஸ்கோ. அந்த இதழுக்கு ஆசிரியராக முஸ்தபாவே நியமிக்கப்பட்டார். 1967 முதல் அந்த இதழ் நிறுத்தப்பட்ட காலம் வரை அவரே ஆசிரியராக இருந்து இதழை வழிநடத்தியதோடு, அதை முற்றுமுழுதாக தமிழ் மொழியின் வளத்தை மேம்படுத்தும் வகையிலேயே நடத்தினார். தமிழ் பண்பாட்டு சிறப்பிதழாக ஒரு இதழைக் கொண்டு வந்தார். 

கலைமாமணி உள்பட பல விருதுகள், அங்கீகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் அவர் பல வகைகளில் கொண்டாடப்பட்டிருக்கிறார். அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்ந்த காலத்திலேயே அவருக்குச் செய்யப்பட்ட நல் மரியாதை அது. உடல் நலம் நலிவுற்ற காலத்தில், நூல்களுக்காக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் பெரும் உதவியாக இருந்தது. 

முஸ்தபாவிடம் இருந்த தனித்தன்மை, அவர் மிகச்சிறந்த மொழி ஆராய்ச்சியாளராக, தமிழ் மீது பிடிப்பு கொண்டவராக இருந்தபோதும், தம்மொழியை சிறப்பிப்பதற்காக எக்காலத்திலும் அவர் பிற மொழிகளைப் பழித்ததில்லை. அவற்றின் மேன்மையை குறைத்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை. இஸ்லாம் மீது அவருக்கு பிடிப்பு இருந்தபோதும் பிற மதங்களின் மீது அவருக்கு சிறிதும் காழ்ப்புணர்வு இருந்ததில்லை. மதங்களுக்கு இடையிலான பொதுமைகளை மையமாக்கியதே அவருடைய ஆன்மிகம். சிறுவர்களுக்காக நிறைய எழுதினார். நிறைய தொகுப்பு நூல்களை உருவாக்கினார். சிறுவர் கலைக்களஞ்சியம், சிறுவர்க்கும் சுதந்திரம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. 

மணவை முஸ்தபா தம் தாய்மொழிக்குச் செய்திருப்பது மிகப்பெரும் பங்களிப்பு. தமிழுள்ள காலம் வரை, அதன் அணிகலன்களாக அவை நிலைத்திருக்கும். 

-வெ.நீலகண்டன்

Add comment


Security code
Refresh