பரங்கிப்பேட்டை நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் பாவாடைசாமி (வயது 55), மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (40), தமிழ்குமரன் (38), கூத்தாண்டவர் சாமி (50), மகேந்திரன்(48), சேகர் (40) ஆகியோருடன் புதுக்குப்பத்தை சேர்ந்த முனியப்பன் என்பவருக்கு சொந்தமான ஒரு பைபர் படகில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்து கடலுக்குள் விழுந்த பாவாடைசாமி உள்ளிட்ட 6 பேரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து தமிழ்வாணன், தமிழ்குமரன், கூத்தாண்டவர் சாமி, மகேந்திரன், சேகர் ஆகிய 5 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். பாவாடைசாமி மட்டும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேரும் கிராமத்துக்குள் வந்து அங்குள்ள மீனவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று பாவாடைசாமியை தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் காலை 10 மணி அளவில் பாவாடைசாமியின் உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அவரது உறவினர்கள் பாவாடைசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடலில் மூழ்கி இறந்த பாவாடைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலில் மூழ்கி பலியான பாவாடைசாமிக்கு, வள்ளியம்மை என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru