அக்கினிச் சிறகுகள் விருது பெறுகிறார் பசுமை ஹாஜி

பார் போற்றும் பரங்கிப்பேட்டையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த சமூக ஆர்வளர்கள் பலர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கம் இப்பணியை முன்னெடுத்து பரவலாக மரக்கன்றுகளை நட்டியது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தும் இத்திட்டம் குறித்து அறிவித்தது. கிரீன்நோவோ மற்றும் பசுமை பிஎன்ஓ என்ற பெயரில் இரு குழுக்கள் இப்பணியை முன்னெடுத்தன.
 
பசுமை பிஎன்ஓ பரங்கிப்பேட்டை முழுதும் சுமார் 1,200 மரக் கன்றுகளுக்கு மேல் நட்டி சாதனைப் படைத்தது. கிரீன்நோவோ பசுமையை மீட்டெடுத்தல், நீர் நிலைகளை பாதுகாத்தல் போன்ற பணிகளில் பாடுபட்டு வருகின்றது. பரங்கிப்பேட்டை மக்களுக்கு நன்கு அறிமுகமான பசுமை ஹாஜி என்று அழைக்கப்படும் மொய்தீன் அப்துல் காதர் கிரீன்நோவோவின் திட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தனது நண்பர்களுடன் பரங்கிப்பேட்டை மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டி பராமரித்து வருகிறார்.

அவரின் சேவைகளை பாராட்டி கடந்த 16.09.2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் "பசுமை தேசம் கலாம் விருது 2016" பசுமை ஹாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது (மேலேயுள்ள படம்).
 
"தமிழ்நாடு சமூக சேவை கழகம்" என்ற அமைப்பு தமிழ்நாட்டில் சமூக சேவையை உயிர் மூச்சாக கொண்டு சிறப்பாக பணிபுரிந்த சமூக சேவகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2015ம் ஆண்டிற்கான "சிறந்த சமூக சேவகர்" என்ற  விருது வழங்கி திருச்சியில்  கடந்த 27.09.2015  அன்று கௌரவிக்கப்பட்டார். (கீழேயுள்ள படம்).
 
 
அந்த வகையில் இந்த வருடம், திருக்கருகாவூர் அக்கினிச்சிறகுகள் அறக்கட்டளை, ஆண்டுதோறும் பல துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதாளர்களாக  புதிய தலைமுறை வார இதழ் உதவி ஆசிரியர் இவள்பாரதி,  இந்து நாளிதழ் உதவி ஆசிரியர் ரமணி பிரபாதேவி, இனிய உதயம் இலக்கிய இதழின் இணையாசிரியர் ஆரூர் தமிழ்நாடன், நியூஸ் 18 தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாரதிதம்பி, புதிய தலைமுறை தொலைக்காட்சி மூத்த ஆசிரியர் தியாகச்செம்மல்,  பாரத் கல்விக் குழுமம் கல்வியாளர் புனிதா கணேசன் ஆகியோருடன், சமூக செயற்பாட்டாளர்கள் பிரிவில் சேலம் இளங்கோ, பசுமை ஹாஜி மற்றும் புதிய பயணம் இராகவ சிவராமன் ஆகியோருக்கு "அக்கினிச் சிறகுகள் விருது" வழங்கப்பட இருக்கின்றன. இதேபோல் கல்விப்பணியில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

இதற்கான விழா 11.3.2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்ட திருக்கருகாவூர், சோழன் மழலையர் பள்ளி வளாகத்தில் நடக்க இருக்கிறது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் நல். இராமச்சந்திரன் தலைமையில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை அக்கினிச்சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் நெடுஞ்சேரி கோ. சிவசண்முகம் செய்து வருகிறார். 

புதன்கிழமை, 08 மார்ச் 2017 14:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru