சசிகலாவிடம் தலைமைப் பொறுப்பு: அதிமுக பொதுக்குழு தீர்மானம் முழுவிபரம்!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், "கழக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை சசிகலாவிடம் தெரிவித்து அவரது சம்மதத்தை பெறுவதற்காக செல்கிறோம்" என்றார் ஓபிஎஸ்.

இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் போயஸ் தோட்டம் சென்று  சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை நேரில் வழங்கினர். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, அதிமுக தலைமைப் பொறுப்பு வி.கே.சசிகலாவிடம் ஒப்படைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்:

அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதிமுக பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும்படி அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றி சசிகலாவிடம் அளித்துள்ளனர்.

பொதுச் செயலாளர் மட்டுமின்றி முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பதவிகளை ஏற்பது தொடர்பாக சசிகலா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016 12:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru