ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் ரத்து

ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் ரத்து
ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய ரெயில்வே துறைக்கு என ஆண்டுதோறும் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பட்ஜெட் கடந்த ஆண்டுடன் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக பொது பட்ஜெட்டில், ரெயில்வே துறைக்கான திட்டங்களும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

2017-18-ம் நிதியாண்டு முதல் ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில், இந்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் ரெயில்வே துறைக்கு என பல்வேறு ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

அதன்படி 2017-18-ம் ஆண்டில் ரெயில்வே துறைக்காக ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.

இதைப்போல ரெயில்கள் தொடர்ந்து தடம் புரளுதல் போன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாடு பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடியில் ‘தேசிய ரெயில் பாதுகாப்பு நிதி’ உருவாக்கப்படும்.

ரெயில் டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை செலவு, சமூக கடமை மற்றும் போட்டியின் அடிப்படையில் அது நிர்ணயம் செய்யப்படும்.

ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., ஐ.ஆர்.எப்.சி. போன்ற ரெயில்வே பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு பங்குச்சந்தைகளில் பட்டியல் படுத்தப்படும்.

3,500 கி.மீ. தூரத்துக்கு புதிய தண்டவாளங்கள் போடப்படுவதுடன், 2020-ம் ஆண்டுக்குள் அகல ரெயில் பாதையில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்குகள் ஒழிக்கப்படும்.

அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பசுமை கழிப்பறை வசதியுடன், சுகாதாரத்தை பேணுவதற்காக பயணிகளுக்கு புதிய செயலியும் அறிமுகம் செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக 500 ரெயில் நிலையங்களில் ‘எஸ்கலேட்டர்’ மற்றும் லிப்ட் வசதி செய்யப்படும். மேலும் புதிய மெட்ரோ ரெயில் கொள்கை வெளியிடப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது.
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru