பெண்களுக்கு வலை விரிக்கும் டிஜிட்டல் வில்லன்கள் !

உங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ரம்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை பரிதாபகரமானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவருக்கு, பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளதாக ஒரு இ-மெயில் வர, அதில் கேட்டுக்கொண்டபடி முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் தந்ததோடு, டெபாஸிட் பணம் இருபதாயிரம் ரூபாயும் கட்டி, ஐ.டி. கார்டுக்கு தன் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம், பாலியல் தொழிலாளர்களின் பட்டியலோடு சேர்ந்து நெட்டில் உலா வந்ததோடு, தொலைபேசி அழைப்புகளும் வர, தற்கொலை வரை சென்று திரும்பியிருக்கிறார் ரம்யா.'

- இது, சமீபத்தில் செய்தித்தாள்களில் பரபரப்பாக வந்த செய்தி.

தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓய்வு நேரத்தில், இணையத்தில் பொழுதைக் கழித்தவருக்கு, சில நாட்களுக்கு முன் வந்திருக்கிறது அந்த இ-மெயில். 'அதிர்ஷ்டக் குலுக்கலில் உங்களுக்கு மூன்று கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. பணத்தை அனுப்புவதற்கு வங்கி சேமிப்பு எண் தேவை. இதற்கு வரிக்கட்டணமாக இருபத்தி ஏழாயிரம் ரூபாயை ...... இந்த வங்கி கணக்குக்கு அனுப்பிவிடவும்' என்று சொன்னது அந்த இ-மெயில் தகவல்.

 

'ஆகா... அடிச்சது அதிர்ஷ்டம்' என்று குஷியான கிருத்திகா, விஷயம் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று தன் கணவரிடம்கூட சொல்லாமல், தன் சேமிப்புடன் சில நகைகளையும் அடகு வைத்து, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிட்டு, அடுத்த மெயிலுக்காக காத்திருந்தார். கண்கள் பூத்ததுதான் மிச்சம்.

ஒரு கட்டத்தில் நகைகள் பற்றி கணவர் கேட்க, அழுதபடியே உண்மைகளைச் சொல்லியிருக்கிறார். அதிர்ந்துபோன கணவர், குறிப்பிட்ட அந்த பேங்க் அக்கவுன்ட் பற்றி விசாரிக்க, ஆஸ்திரேலியா வரை சென்றுள்ளது அந்த லிங்க்! அதற்கு மேல் ஏதும் செய்ய முடியாமல் போக... பணத்தை இழந்ததோடு, கணவரின் சந்தேகத்துக்கும் ஆளாகி, இப்போது வாழ்க்கையை இழந்து நிற்கிறார் கார்த்திகா.

-இதுவும் சமீபத்திய செய்திதான். ஆனால், செய்தித்தாள்களில் வராமலே போன செய்தி

வெளியில் வந்த செய்திகளைவிட, வராமல் போன செய்திகள்தான் ஏராளம். இப்படிப்பட்ட சோகக் கதைகள் இப்போது நாடு முழுக்க பெருகிக்கொண்டே போகின்றன. குறிப்பாக, பெண்களை இலக்காக வைத்தே இதுபோன்ற மோசடிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. வீட்டில் போரடிக்கிறதே என்று இ-மெயில்... சாட்டிங்... எஸ்.எம்.எஸ். என்று பொழுதைக் கழிக்க நினைக்கும் பெண்கள், தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை உணராமலேதான் இருக்கிறார்கள்.

"இப்படி எதிர்முனையில் யார் என்றே தெரியாமல் தங்களை குறிவைக்கும் இத்தகைய இணையதள மோசடிகளில் இருந்து பெண்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது..?" என்ற கேள்வியோடு சென்னை, சைபர் க்ரைம் உதவி கமிஷனர் சுதாகரைச் சந்தித்தோம்.

"இந்தக் காலத்தில் 'சைபர் க்ரைம்' எனப்படும் இணைய தள மோசடிகள் குறித்து போதுமான விழிப்பு உணர்வு மக்களிடம் ஏற்படவில்லை. இதுபோன்ற மெயில் அனுப்புபவர்களுக்கு பெரும்பாலும் பெண்கள்தான் சுலபமான, முக்கிய இலக்கு. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாந்த செய்தியை அம்பலப்படுத்த தயங்கி, புகார்கள் தருவதில்லை என்பதுதான் மோசடிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. அப்படியே சிலர் புகார் தந்தாலும் குற்றவாளியை நோக்கி காய் நகர்த்தினால், இறுதியாக அது வெளிநாட்டு இணைய விலாசத்தில் சென்று நிற்கும். இருநாடுகள் சார்ந்த சட்ட சிக்கல்கள் இருப்பதால் மேற்கொண்டு வழக்கு நகராது. எனவேதான் சைபர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாமலேயே இருக்கிறது. அனைத்து நாடுகளுக்கும் பொதுவான 'சைபர் சட்டங்கள்' ஏற்படுத்துவதுதான் இதற்குத் தீர்வு'' என்று தன் வருத்தத்தை முதலில் பதிவு செய்தவர்,

"இப்போது ஆர்குட், ஃபேஸ்புக் என்று நட்புலகத்துக்காக பல சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்கள் பெருகிவிட்டன. அதில் தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை பலரும் பதிவு செய்கிறார்கள். இதெல்லாம் நெருப்போடு விளையாடுவதற்கு சமம். குறிப்பாக பெண்கள், இத்தகைய இணைய தளங்களில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்யாமலிருப்துதான் பாதுகாப்பானது. குறிப்பாக, வலைதளங்களில் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைக்கூட டவுன்லோடு செய்வதற்கான தொழில்நுட்பங்களும் இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர வேண்டும்'' என்று எச்சரித்தவரிடம், நம் அலுவலகத்துக்கு வந்த கடிதம் ஒன்றைத் காட்டினோம்.

கோவை வாசகி எழுதிய அந்தக் கடிதத்தில்...

'என் கணவர் பெட்ரூம் காட்சிகளை செல்போன் கேமராவில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் பழக்கம் கொண்டவர். பின்பு அதனை போனில் இருந்து அழித்து விடுவார். எத்தனை முறைச் சொல்லியும் இந்தப் பழக்கத்தை விடவில்லை. ஒரு முறை, புதுப்பாடல்ளை டவுன்லோட் செய்வதற்காக, அவருடைய மொபைலை ஒரு பிரவுஸிங் சென்டரில் கொடுத்தார். அழிக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எப்படியோ மொபைலில் இருந்து எடுத்துவிட்டவர்கள், பலருக்கும் அந்த போட்டோக்களை அனுப்ப, தாங்க முடியாத அவமானத்தில் தவித்த நாங்கள், இப்போதே ஊரையே காலி செய்துவிட்டோம்...'

- கண்ணீருடன் முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

தொடர்ந்தார் சுதாகர்...

"ஆம்... 'டேட்டா ரெக்கவரி' செய்வதற்கென்று நிறைய சாஃப்ட்வேர்கள் உள்ளன. மொபைலில் 'டெலிட்' செய்த போட்டோ உள்ளிட்ட அனைத்து டேட்டாக்களையும் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தி திரும்பவும் எடுத்துவிட முடியும். இதனால் பாதிக்கப்படுவது பெண்கள்தான். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, தனிமையான சந்தர்ப்பங்களை மொபைல் போனில் படமெடுக்க காதலனை அனுமதித்திருக்கிறாள். இருவருக்குள் ஏதோ பிரச்னை வர, அந்தப் படங்களை எல்லாம் 'ப்ளூ டூத்' மூலம் தன் நண்பர்களுக்கு அந்தப் பையன் அனுப்பிவிட, இப்போது கேள்விக்குறியாகியுள்ளது அவள் வாழ்க்கை. எனவே, எக்காரணம் கொண்டும் மொபைலில் பர்சனல் போட்டோக்கள் எடுக்க வேண்டாம்'' என்று எச்சரித்தவர், 'ப்ளூ டூத்'-ல் அடங்கியுள்ள சில ஆபத்துகளையும் கூறினார்.

"ப்ளூ டூத் என்பது, செல்போன் நெட்வொர்க்-ஐ சாராமல், சம்பந்தப்பட்ட மொபைலின் டெக்னிக்கல் செட்டிங்ஸ்-ஐ சார்ந்துள்ளது. எனவே, ப்ளூ டூத் மூலம் அரங்கேறும் அட்டூழியங்கள், சைபர் க்ரைம் குற்றங்களில் வராது என்பதால் வழக்கு பதிவு செய்ய இயலாது (மொபைலுக்கு வரும் தவறான எஸ்.எம்.எஸ்-கள், இணையம்போல மொபைலுக்கு அனுப்பப்படும் 'குலுக்கல் பரிசு' எஸ்.எம்.எஸ். குறித்த புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படும்). ஆக, விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மக்கள்தான். பொதுவாக, ப்ளூ டூத் ஆன் செய்யப்பட்டிருந்தால், மொபைலில் உள்ள படங்களை உங்களின் அனுமதியில்லாமலேயே மற்றவர்கள் டவுன்லோட் செய்து கொள்ள நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே, தேவையற்ற நேரம், கூட்டமான இடங்கள், பயண நேரங்கள் இங்கெல்லாம் ப்ளூ டூத்-ஐ ஆஃப் செய்துவிடவேண்டும்.

'இலவசமாக எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்' என்று அழைக்கும் இணையதளங்களை தவிர்த்துவிடுங்கள். முதலில் ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்... எந்த விஷயமும் இலவசமாக கிடைப்பதில்லை. நாம், நம் நண்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதில் இலவச இணையதளத்துக்கு என்ன லாபம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மை ஏமாற்றி, செல்போன் எண்களை சேகரிக்கும் முயற்சிதான் அது.

இதுபோலவே, 'நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த எஸ்.எம்.எஸ்-ஐ நீங்கள் யாருக்காவது ஃபார்வர்ட் செய்தால் எனக்கு பத்து பைசா கிடைக்கும்' என்று வரும் மெஸேஜ்களும் போலியே!'' என்று உடைத்தவர்,

"பல சமயங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், மோசடி இ-மெயிலோ அல்லது எஸ்.எம்.எஸ்-ஸோ வந்தால் அதை அழித்துவிடாமல் உடனடியாக போலீஸில் புகார் செய்வதுதான் நல்லது. குற்றவாளியை எளிதில் கண்டுபிடிக்க அது உதவியாக இருக்கும்.

டெக்னாலஜி என்பது தீமையும் நன்மையும் அடங்கியது. எனவே, அதைக் குற்றம் சொல்லாமல், நம்மைப் பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!'' என்று அக்கறையோடு அறிவுரை சொன்னார் அசிஸ்டென்ட் கமிஷனர் சுதாகர்.

Courtesy: Aval Vikatan

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013 13:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru